உன் கண்ணீரின் கனத்தை பூமி தாங்காது!! கிரிக்கெட் வீரர் கம்பீரின் மறுபக்கம்

அது நல்ல ஆட்டமோ, அவ்வளவாகச் சிறப்பில்லாத ஆட்டமோ இந்திய கிரிக்கெட் அணியின் கெளதம் கம்பீர் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளையும் பார்க்க முடியாது. ஆனால், அவருக்கு வேறோரு முகம் உண்டு எனக் காட்டியுள்ளார். இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் குறித்து பலமுறை நெகிழ்ச்சியாகக் கருத்து சொல்லியிருக்கிறார்.

இன்னும் கூடுதலாக இதற்கு முன் சத்தீஸ்கரில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 25 சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் பிள்ளைகளுக்கு தனது அறக்கட்டளை மூலம் முழுமையான கல்விச்செலவை ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. தற்போது செய்திருக்கும் செயலால் மற்ற வீரர்களுக்கும் உதாரணமாக இருந்துள்ளார்.

கம்பீர், ஸோக்ராவின் முழு வாழ்க்கைக்குமான கல்விச் செலவை ஏற்றுக்கொண்டுள்ளார். ஸோக்ரா, காஷ்மீரின் ஆனந்த்நாக் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான உதவி துணை ஆய்வாளர் அப்துல் ரஷீத்தின் மகள். `ஸோக்ரா, தாலாட்டுப் பாடி உன்னை என்னால் தூங்கவைக்க முடியாது. ஆனால், உன் கல்விக்கனவுகளை நீ அடைய உன்னை விழிக்கவைக்க முடியும்.

உன் வாழ்க்கை முழுவதற்குமான கல்வி பயில உதவி செய்வேன் இந்தியாவின் மகளே' என தன் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். அப்துல் ரஷீத் இறந்தபோது ஸோக்ரா கதறி அழும் படம், இந்திய ஊடகங்களில் வைரலாகப் பரவியது. அந்தப் படம்தான் கம்பீரை இப்படியான முடிவு எடுக்கச் செய்துள்ளது.

அதற்கு அடுத்தும் ஒரு டிவிட் எழுதியுள்ளார் கம்பீர். ஸோக்ரா கண்ணீர்விட்டு கதறும் படம்கொண்ட அந்த டிவிட்டில் `உன் கண்களிலிருந்து வழியும் கண்ணீரை பூமியில் வழியவிடாதே! உன் மனவேதனையைத் தாங்கும் வலிமை பூமித்தாய்க்கே இல்லை.

உன் தந்தை மாவீரர் அப்துல் ரஷீத்துக்கு வணக்கங்கள்' எனத் தெரிவித்துள்ளார். கம்பீர் - நட்டாஷா தம்பதிக்கு, கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஏற்கெனவே ஆசின் என்கிற பெண் குழந்தை உள்ளது.

தற்போது, இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இரண்டுமே பெண் குழந்தைகள் கொண்டுள்ள கௌதம் கம்பீருக்கு, ஸோக்ராவின் கண்ணீர் மனதை நெகிழ்த்திவிட்டது.

அப்துல் ரஷீத்தைப் போன்று களப்பலியாகும் காவல் துறையினரின் குடும்ப நிதிக்கு அந்த மாநில காவல்துறை நன்கொடை கேட்டு ஓர் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கை, சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பகிரப்பட்டது. இதைத் தொடர்ந்து காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் பொதுமக்களிடமிருந்து நன்கொடைகள் குவியத் தொடங்கியுள்ளன.

ஸோக்ராவுக்கு ஆறுதல் சொல்லி தெற்கு காஷ்மீரின் டி.ஐ.ஜி முகநூலில் ஒரு நிலைத்தகவல் பதிந்துள்ளார். அது, படிப்பவர்களுக்குக் கண்ணீர் வரவழைக்கும் அளவுக்கு உள்ளது. அதில் `மகளே, உண்மையில் என்ன நடந்துள்ளது என்பதை நீ புரிந்துகொள்ளும் வயதில் இல்லை.

ஆனால், உன் தந்தை செய்துள்ள தியாகம் அளப்பரியது' என்று தொடங்கும் அந்தக் கடிதத்தில் `நம் காவலர்களின் குடும்பங்கள் இதுபோன்ற பல இழப்புகளை எதிர்கொண்டு மிகப்பெரிய அதிர்ச்சிகளைச் சந்தித்து வருகின்றன.

நாட்டுக்காக தியாகம் செய்த வீரர்களும், அந்த வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் முகங்களும் நமக்கான மிகப்பெரிய வரலாற்றை உருவாக்குகின்றன. நாங்கள் இந்தக் காலகட்டத்தில் வாழ்ந்தோம்.

இந்த நாட்டைக் காப்பாற்றுவதற்காக அளப்பரிய தியாகங்களைச் செய்துள்ளோம் என்கிற பெருமைமிகுந்த வரலாற்றை ஏற்படுத்துகிறது' என்ற அந்த முகநூல் நிலைத்தகவல், ஆயிரக்கணக்கில் பகிரப்பட்டது. இந்த ஸ்டேட்டஸ்தான் கம்பீர் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் பார்த்த ஸோக்ராவின் படம் அவரின் கண்களைக் கலங்கச் செய்துவிட்டது.