இது பாதாள உலகத்தின் வாசலா? திடுக்கிடும் ஆதாரம்

இது பாதாள உலகத்தின் வாசலா? திடுக்கிடும் ஆதாரம்

நிரந்தர பனிக்கட்டிகளால் மூடப்பட்ட நிலங்கள் சைபீரியாவில் நிறையவே உண்டு. ஆனால், தற்போதைய வெப்பநிலையில் அவை எல்லாம் மெல்லிய பனிக்கட்டிகளாக மாறி வருகிறது. துருவப்பகுதிகளில் (Tundra) நின்றால் கால்களுக்கு கீழே நீர் கொப்பளிப்பதை உணர முடிகிறது. இது ஒரு புறமிருக்க, சைபீரியாவின் மற்றோரு பகுதியில் இருக்கும் பெரிய பள்ளம் (Crater) ஒன்று அளவில் பெரியதாகி கொண்டே இருப்பதாக அச்சப்படுகிறார்கள் கிராம மக்கள். வடகிழக்கு சைபீரியாவில் இருக்கும் யகூட் (Yakut) இன மக்கள், இதை “நரகத்துக்கு அழைத்துச் செல்லும் பாதை”, “பாதாள உலகத்தின் பாதை” என்றெல்லாம் அழைக்கிறார்கள்.

படகாக பள்ளம் (Batagaika Crater)

'மெகா சரிவு' என்று அழைக்கப்படும் இந்தப் பள்ளத்தின் பெயர் படகாக பள்ளம். இம்மாதிரியான பள்ளங்கள் சைபீரியாவில் ஏற்படுவது சகஜம் என்றாலும் இந்தப் பள்ளம் நிச்சயம் மற்ற பள்ளங்களை போல் இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். சஹா குடியரசின் தலைநகரான யகூட்ஸ்க் (Yakutsk) என்ற நகரில் இருந்து 660 கிமீ (410 மைல்கள்) தள்ளி உருவாகியிருக்கிறது இந்த மாபெரும் பள்ளம். இது 1 கிமீ நீளமும் 86 மீட்டர்கள் (282 அடிகள்) ஆழத்துடன் இருக்கும் இது தான் இந்த வகை பள்ளங்களில் உலகத்திலேயே பெரியதாகும். பிரச்னை அதுமட்டுமல்ல, நாளாக நாளாக இது அளவிலும், ஆழத்திலும் பெரிதாகி கொண்டே இருக்கிறதாம்.

ஜெர்மனியில் இருக்கும் ஆல்ஃபிரெட் வெஜென்னர் நிறுவனத்தைச் சேர்ந்த ஃபிராங்க் குந்தர் (Frank Gunther) சமர்ப்பித்த ஆராய்ச்சி முடிவுகளில், இந்தப் பள்ளம் கடந்த பத்து வருடத்தில், சராசரியாக வருடத்திற்கு 10 மீட்டர்கள் (33 அடிகள்) என்கிற விகிதத்தில் வளர்ந்திருக்கிறது. இதுவே வெப்பமான ஆண்டுகளில் வருடத்திற்கு 30 மீட்டர்கள் (98 அடிகள்) வளர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது, வட துருவத்தில் வெப்பநிலை அதிகரிப்பதால், இந்தப் பிளவு அருகிலிருக்கும் பள்ளத்தாக்கு வரை நீள வாய்ப்புள்ளது என்றும், இதனால் பல நிலச்சரிவுகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு என்று எச்சரிக்கிறார் ஆல்ஃபிரெட்.

என்னென்ன பாதிப்புகள் வரும்?

இந்தப் பள்ளம் முதலில் தோன்றியது 1960களில். காடுகளை அழித்ததால், இந்த நிரந்தர பனிக்கட்டிகளால் மூடப்பட்ட நிலங்கள், நிழல் இல்லாமல் சூடாக .ஆரம்பித்தன. 2008ஆம் ஆண்டு பெருக்கெடுத்த பெரும் வெள்ளம், நிலைமையை மிகவும் மோசமாக்கியது. இதுவே இந்தப் பள்ளம் விரிவடையவும் காரணமாகி போனது. இந்தப் பள்ளத்தில் இருக்கும் கார்பன் அளவு நம் வளிமண்டலத்தில் இருக்கும் கார்பன் அளவிற்கு இணையான ஒன்றாக இருக்கிறதாம். ஒரு நிலையற்ற தன்மையில் இருக்கும் இந்தப் பள்ளத்தால் மக்களுக்கு ஆபத்து ஏற்படுவது மட்டுமில்லாமல் ஆயிரம் வருடங்களுக்கு மேலாகப் புதையுண்டு கிடக்கும் கார்பன் நச்சுப் பொருட்களை வளிமண்டலத்திற்குக் கடத்தி விடும் அபாயம் உள்ளது. இந்தப் பள்ளம் மேலும் உருக உருக, பசுங்குடில் வாயுக்கள் (Greenhouse Gases) அதிக அளவில் வெளியேறத் தொடங்கும். வெப்பநிலை அதிகமாகும் போது இதே போல் பள்ளங்கள் பூமியின் மற்றப் பகுதிகளிலும் ஏற்படக் கூடும்.

என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

நிறையத் தீமைகள் இருந்தாலும், இதனால் சில நன்மைகளும் உண்டு. தற்போது இந்தப் பள்ளத்தில் இருந்து 200,000 வருடங்கள் வரையிலான காலநிலை தரவுகளை (Climate Data) பெற்று விட முடியும். பெரிதாகிக் கொண்டிருக்கும் இந்தப் பள்ளம் நீண்ட புதைக்கப்பட்ட வனப்பகுதிகள், இறந்த விலங்குகளின் உறைந்த மாதிரிகள், பண்டைய மகரந்த மாதிரிகள் மற்றும் 2,00,000 ஆண்டுக் கால வரலாற்றுக் காலநிலை பதிவுகள் (Climate Data) போன்ற இரகசியங்களை வெளிக்கொண்டு வந்த வண்ணம் உள்ளது.

இதிலிருந்து வெளிப்படும் வண்டலைக் கொண்டு, சைபீரியாவின் தட்பவெப்ப நிலை எப்படி எல்லாம் மாறியது என்பதைக் கண்டுபிடித்து, எதிர்காலத்தில் அதன் வெப்பநிலை எப்படி இருக்கும் என்பதைச் சுலபமாக கணித்து விட முடியும். இது குறித்து ஆராய்ந்து வரும் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஜூலியன் மூர்டன் பேசுகையில்,

“படகாக பள்ளத்தில் இருக்கும் நிரந்தர பனிக்கட்டிகளை ஆராய்ந்ததில், உள்ளே அழிந்துபோன இரண்டு அடுக்கு வனப்பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இது இதற்கு முன்னரே இரண்டு முறை தட்பவெப்ப நிலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக் காட்டுகிறது. மேலிருக்கும் அடுக்கு, கீழிருக்கும் பழங்கால அடுக்கை அழித்துவிட்டு மேலே வந்துள்ளதாகத் தெரிகிறது. இது மீண்டும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. சைபீரியாவை அதற்குத் தயார் செய்ய வேண்டும். ஆனால், உள்ளே இருக்கும் மீதங்களின் சரியான காலத்தை இதுவரை திட்டவட்டமாக கணிக்க முடியவில்லை. முயற்சிகள் நடந்த வண்ணம் உள்ளன” என்று தெரிவித்தார்.

அன்புள்ள அன்னை பூமிக்கு,

இயற்கையை முழுமையாகப் படிக்காதவர்கள் நாங்கள். சொல்லப் போனால் படிக்க முயற்சியே செய்யாதவர்கள். இருபுறம் எரியும் மெழுகுவர்த்தியாய் உன்னை மாற்றி விட்டதற்கு வருந்துகிறோம். அதுவும் எப்போது? வெப்பம் எங்களை நோக்கி நெருங்கும் போது தான், எங்களுக்கு அச்சப்படலாமா, வேண்டாமா என்ற யோசனையே வந்திருக்கிறது. இன்னமும் எத்தனை நாள்களுக்கு மக்கள் தொகையை மட்டுமே காரணமாக காட்டிக் கொண்டிருக்க முடியும் என்று தெரியவில்லை. ஆனால், நீ இந்த நிலையிலும் எங்களுக்கு உதவ, பல்வேறு உதவிகளை நேரடியாகச் செய்து கொண்டு தான் வருகிறாய். எங்கள் அறிவியலுக்கு உதவும் ஏணியாக பல்வேறு செயல்களைப் புரிந்து, “உங்களை நீங்கள் முதலில் காப்பாற்றிக் கொள்ளுங்கள் மூடர்களே” என்று கூவிக் கொண்டிருக்கிறாய். அப்படி ஒரு கூவல் தான் இதுவும். சுயநலம் கலந்த நன்றிகள் பல!