காதலியை கொன்று புதைத்த இன்ஜினியர்!! அதிரும் உண்மைகள்

பட்டதாரி பெண்ணை கொன்று புதைத்ததாக இன்ஜினியர் ஒருவர் போலீசாரால் பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, சாயிபாபா காலனி வேலாண்டிபாளையம் கோவில்மேடு பகுதியை சேர்ந்த 21 வயது பட்டதாரி பெண் கடந்த 16ம் தேதி திடீரென மாயமானார். அவரது குடும்பத்தினரால் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுதொடர்பாக பெற்றோர், கோவை சாயிபாபா காலனி போலீசில் கடந்த 19ம் தேதி புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். அவரது செல்போனில் வந்த அழைப்புகள், கடைசியாக யாருடன் பேசினார் என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

அப்போது அவர், கடைசியாக கோவை சரவணம்பட்டியை சேர்ந்த பிரசாந்த் (23) என்பவருடன் பேசியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை நேற்று பிடித்து விசாரித்தனர். அவர், சரவணம்பட்டியில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் இன்ஜினியராக பணிபுரிந்துள்ளது தெரியவந்துள்ளது.

இவர் கடந்த 16ம் தேதி கல்லாறு பழப்பண்ணைக்கு அந்த பெண்ணை அழைத்துச்சென்று கொலை செய்து, உடலை புதைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் அவர் அளித்துள்ள வாக்கு மூலம் அடிப்படையில் அவரை கல்லாறு பழப்பண்ணைக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்குள்ள ஆற்று பகுதியில் தோண்டி பெண்ணின் சடலத்தை எடுத்தனர். மேலும் காதல் விவகாரத்தில் இக்கொலை நடந்தது என தெரியவந்துள்ளது. இதையடுத்து பிரசாந்தை போலீசார் கைது செய்தனர்.