தொடரும் கந்துவட்டிக் கொடூரம்!! சிறுநீரகத்தையே கேட்ட மா பாதகம்

கந்துவட்டிக் கடனைச் செலுத்துவதற்காக சிறு நீரகத்தை விற்க நிர்ப்பந்தித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த சம்பவம் தமிழ் நாடு ஈரோடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்துத் தெரியவருவதாவது,

ஈரோடு மாவட்ட சூரம்பட்டியை சேர்ந்த நெசவுத் தொழிலாளர் ரவி என்பவர் 3 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ. 3 லட்சம் வரை கந்துவட்டிக் கடன் வாங்கியதாக சொல்லப்பட்டுள்ளது.

அவர் இதுவரை வட்டியை மட்டுமே கட்டி வந்த நிலையில் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நெசவாளர் ரவியை கடன் கொடுத்தவர்கள் சிறுநீரகத்தை விற்க நிர்பந்தப்படுத்தியுள்ளனர். இடைத்தரகர் ஒருவர் மூலம் அவர் கேரள மாநிலத்திற்கு சிறுநீரக தானத்திற்காக அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து ரவியின் மனைவி சம்பூரணம் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். கிட்னியை விற்பதன் மூலம் ரூ. 5 லட்சம் பணம் வாங்கி கடனை திரும்ப அளிக்குமாறு அவர்கள் வற்புறுத்தி ரவியை அழைத்து சென்றுள்ளதாக சம்பூரணம் மனு கொடுத்துள்ளார்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பிரபாகரின் அதிரடி நடவடிக்கையால் தொழிலாளர் ரவி எர்ணாகுளம் மருத்துவமனையில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். ரவிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கடனை திருப்பி செலுத்த முடியாததால் ஒரு கிட்னியை விற்றாவது கடனை அடைத்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம் என்று அவர் இந்த முடிவை எடுத்தாகவும், மனைவியின் சம்மதம் இல்லாத நிலையிலும் இடைத்தரகர்கள் ரவியை அழைத்து சென்றதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் நாட்டுச் செய்திகள் கூறுகின்றன.