முன்னால் முதலாளியை கொடூரமாக கொன்ற இளைஞன்..அதிர வைக்கும் காரணம்

சென்னை கும்மிடிப்பூண்டியில் தொழில்போட்டியில் முன்னாள் முதலாளியை 6 இளைஞர்கள் கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, மபொசி நகரைச் சேர்ந்த யூசப் என்பவரின் மகன் ஷாஜஹான். 27 வயதான இவர், எலக்ட்ரானிக் பொருட்களை மொத்தமாக வாங்கி, புறநகர் மின்சார ரயிலில் விற்பனை செய்துவந்துள்ளார்.

இவரிடம் கும்மிடிப்பூண்டி திருக்குளம் தெருவைச் சேர்ந்த விமல் என்ற 20 வயது இளைஞர் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன், ஷாஜஹானிடம் இருந்து விலகியுள்ளார் விமல்.

பின்னர் ஷாஜஹானைப் போல் எலக்ட்ரானிக் பொருட்களை மொத்தமாக வாங்கி புறநகர் மின்சார ரயிலில் விற்பனை செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷாஜஹான் தன்தொழிலை பாதிக்கும் வகையில் தொழில் செய்யக்கூடாது என விமலை எச்சத்துள்ளார்.

இதனால் கடுப்பான விமல், ஷாஜஹானை கொல்ல திட்டம் தீட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது நண்பர்களுடன் ஆலோசித்த அவர் ஷாஜஹானை போட்டு தள்ள முடிவு செய்தார்.

இதைத்தொடர்ந்து கடந்த 8ஆம் தேதி இரவு ஷாஜஹானிடம் நயமாக பேசி, கும்மிடிப்பூண்டி துணை மின் நிலையம் பின்புறமுள்ள ரயில் பாதைக்கு வருமாறு அழைத்துள்ளனர். இதனை நம்பி ஷாஜஹானும் அங்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு மறைத்து வைத்திருந்த கத்தியால், ஆறு பேரும் சேர்ந்து ஷாஜஹானை சரமாரியாக குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஷாஜஹான் துடிதுடித்து உயிரிழந்தார்.

பின்னர் ஷாஜஹானின் உடலை ரயில் பாதையின் கீழ் உள்ள பாலத்தின் அடியில் போட்டு சென்றனர். மறுநாள் பறவைகள் அந்த இடத்தில் வட்டமிட்டதை தொடர்ந்து ஷாஜஹானின் உடலை அங்கேயே புதைத்துள்ளனர்.

எப்படியும் போலீஸ் கண்டுபிடித்துவிடும் என்று பயந்த அவர்கள் கும்மிடிப்பூண்டி விஏஓவிடம் சரணடைந்துள்ளனர். இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள கிருஷ்ணா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் எப்படி கொலை செய்தனர் என்பதை விலாவரியாக விளக்கினர். மேலும் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அவர்கள் அடையாளம் காட்டியதை தொடர்ந்து வட்டாட்சியர், மற்றும் அரசு மருத்துவர்கள் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

அதில் ஷாஜஹானின் உடலில் 22 இடங்களில் கத்திக்குத்து இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் அவரின் கழுத்தும் அறுக்கப்பட்டிருந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

தொழில்போட்டியில் முன்னாள் முதலாளியை இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொடூரமாக கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அண்மைக்காலமாக கொலைகள் மற்றும் குற்றசம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.