பெற்றோர்களைக் கவனிக்காவிட்டால் பிள்ளைகளுக்கு இது தான் தண்டனை! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பெற்றோர்களைக் கவனிக்கத் தவறினால், தங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் அளித்த சொத்துகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பை அந்தேரி பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவரின் மனைவி இறந்த பிறகு, அவர் இரண்டாவது திருமணம் செய்ய விரும்பியுள்ளார். அப்போது முதியவரின் மகனும், மருமகளும் ஏதேதோ பேசி அவரிடம் இருந்த குடியிருப்பில் 50 சதவிகிதத்தை கடந்த 2014- ஆம் ஆண்டு தங்களின் பெயரில் எழுதி வாங்கியுள்ளனர்.

முதியவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பின் மகனும், மருமகளும் முதியவரையும் அவரின் மனைவியையும் கவனிக்காமல் தரக்குறைவாக நடத்தியுள்ளனர். மேலும், அந்தேரி குடியிருப்பிலிருந்து இருவரும் வெளியேற வேண்டும் எனவும் தந்தையிடம் கூறியுள்ளார் மகன்.

இந்த நிலையில், மும்பை முதியவர்கள் தீர்ப்பாயத்தை நாடியுள்ளார் அந்த முதியவர். அங்கு அவரின் மகனுக்கு வழங்கிய சொத்தை ரத்து செய்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அவரின் மகன் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதன் முடிவில் முதியோர் பாதுகாப்புச் சட்டங்களைச் சுட்டிக்காட்டி பெற்றோர்களைக் கவனிக்க வேண்டியது பிள்ளைகளின் கடமை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து பிள்ளைகள் பெற்றோர்களைக் கவனிக்கத் தவறினால், அவர்களுக்கு அளித்த சொத்துகளைப் பெற்றோர்களேத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமையுண்டு எனக் கூறி தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பு வழங்கினர்.