ராஜீவ் காந்தி வழக்கில் குற்றவாளிகள் விடுதலை தொடர்பில் வெளியான தீர்ப்பு

ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேர்களை விடுதலை செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் 27 ஆண்டுகளாக சிறையில் இருந்துவருகின்றனர்.

2014 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, நீண்ட காலமாக சிறையில் இருந்துவரும் ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.

ஆனால், அன்றைய மத்திய அரசு அவருடைய அறிவிப்பை உச்ச நீதிமன்றத்தில் எதிர்த்து வாதிட்டது. அப்போது, உச்ச நீதிமன்றம் ராஜீவ் காந்தி கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்துள்ளது. அதனால், மத்திய அரசின் அனுமதி இல்லாமல் குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியாது என்று உத்தரவிட்டது.

ராஜீவ் கொலை வழக்கில் 9 வோல்ட் பேட்டரியை வாங்கி கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்று 27 ஆண்டுகளாக சிறையில் இருந்துவரும் பேரறிவாளன் கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றத்தில் விடுதலை செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை அரசியல் படுகொலை செய்திருப்பதால், கொலைக் குற்றவாளிகள் 7 பேர்களை விடுதலை செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் பிரபல திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். அப்போது, ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யக் கோருவது குறித்து ராகுல் காந்தி தனக்கு அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.