கருணாநிதிக்கு அடுத்து தி.மு.க கட்சியின் அடுத்த தலைவர் யார்? சூடுபிடிக்கும் அரசியல்களம்

திமுகவின் தலைவராக, தற்போதையை செயல் தலைவர் ஸ்டாலின் விரைவில் பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த செவ்வாய் கிழமை அன்று மாலை உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். பல தலைவர்கள் இவருக்கு கடந்த இரண்டு நாட்களாக அஞ்சலி செலுத்தினார்கள்.

கருணாநிதியின் உடல், மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுகவில் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.

ஸ்டாலின் தற்போது திமுகவின் செயல்தலைவராக இருக்கிறார். திமுக தலைவர் கருணாநிதி சுகவீனமாக இருந்த போது ஸ்டாலின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு தலைவருக்கு இணையான அதிகாரம் வழங்கப்பட்டு இருந்தது

இந்த நிலையில்தான் கருணாநிதி மறைவை ஒட்டி திமுக செயற்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 14ம் தேதி கூடுகிறது. இதற்கான அறிவிப்பை திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் விடுத்துள்ளார். திமுக தலைமைக் கழக அலுவலகமான அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடக்கிறது. காலை 10 மணிக்கு செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் ஸ்டாலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கட்சியில் அதிரடியாக சில பணிகளை தொடங்க வேண்டும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தேர்தலை கருத்தில் கொண்டு தலைவர் பதவி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம்.

அதேசமயம், இந்த கூட்டத்தில் தலைவர் பதவி மாற்றம் தொடர்பாக தீர்மானம் இருக்காது என்று திமுக நிர்வாகிகள் சிலர் தெரிவிக்கிறார்கள். இந்த கூட்டம் கருணாநிதிக்கான அஞ்சலி கூட்டம் மட்டுமே. விரைவில் செயற்குழு, பொதுக்குழு, உயர் மட்ட செயல் திட்டக் குழுக் கூட்டங்கள் கூட்டப்பட்டு அதில் ஸ்டாலின் பதவியேற்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.