காதல் திருமணம் செய்து ஊரைவிட்டு ஓடிவந்த இளம்ஜோடி! பின் காத்திருந்த பேரதிர்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே காதல் கணவருடன் தனியார் நிறுவனத்தில் தங்கி கூலி வேலைபார்த்து வந்த பீகாரை சேர்ந்த இளம் பெண்ணை ஆசைக்கு இணங்க வற்புறுத்தி கல்லால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தலையில் ரத்தம் சொட்ட சொட்ட தப்பி வந்த அந்த பெண்ணுக்கு அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

பீகார் மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் காஜல்..! காதல் கணவர் அர்ஷத் மன்சூர் உடன் வீட்டை விட்டு வெளியேறிய 19 வயது பெண்ணான காஜல், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரி பாளையத்தில் உள்ள தனியார் ஹாலோ பிளாக் கல் தயாரிக்கும் நிறுவனத்தில் கணவருடன் தங்கி கூலி வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகின்றது.

அந்த நிறுவனத்தை ஜாவித் என்பவர் நடத்தி வந்தார். அவருக்கு காஜல் மீது காதல் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் காஜலின் கணவர் அர்ஷத் மன்சூருக்கு பக்கத்து ஊரில் வேலை கொடுத்து விட்டு நிறுவனத்தில் தனியாக இருந்த காஜலிடம் காதலை வெளிப்படுத்தி உள்ளார் ஜாவித். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் காஜலை ஆசைக்கு இணங்க வற்புறுத்தி உள்ளார். அவர் தப்பிச்செல்ல முயன்றதால் அங்கிருந்த இருவரின் உதவியுடன் ஜாவித், காஜலிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகின்றது.

ஆனால் அவர்கள் பிடியில் இருந்து தப்பி ஓடிய காஜல் மீது கல்லை கொண்டு தாக்கி உள்ளனர். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட ஓடியுள்ளார். வழியில் வெளியூர் சென்ற கணவன் அர்ஷத் தனது மனைவியை பார்த்து விட, துரத்திச் சென்றவர்கள் பின்வாங்கியதாக கூறப்படுகின்றது.

பிழைப்பு தேடி வந்த இடத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் இளம் காதல் தம்பதிகள் தவித்து நிற்க அப்பகுதி மக்கள் காஜலை அருகில் உள்ள அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த ஹாலோ பிளாக் நிறுவன உரிமையாளர் ஜாவித் அங்கிருந்த அர்ஷத் மன்சூரிடம் சமாதனம் பேசி அழைத்து செல்ல முயன்றார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர் ஜாவித் உள்ளிட்ட 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது ஜாவித், தனக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பில்லை என்றும் அவரது நண்பர்கள் தான் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

பெற்றோரை பிரிந்து காதலனை நம்பி ஊரை விட்டு வெளியேறி, பிழைப்பு தேடி தமிழகம் வந்த இளம் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள இந்த விபரீத சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.