அமெரிக்காவில் சம்பியன் பட்டம் வென்ற தமிழக சிறுவன் : முன்னணி பிரபலங்களிடம் இருந்து குவியும் பாராட்டுகள்

“தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்” நிகழ்ச்சியின் சம்பியன் பட்டதைச் சுவீகரித்த சென்னையைச் சேர்ந்த சிறுவன் லிடியன் நாதஸ்வரதத்துக்கு 1 மில்லியன் டொலர் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் “தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்” என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியிலேயே 13 வயதான சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் சம்பியனாகி உலகப்புகழைப் பெற்றுள்ளார்.

கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளிலிருந்து கலைஞர்கள் குழுவாகவும், தனி நபராகவும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த இசையமைப்பாளர் வர்சனின் மகனான பியானோ கலைஞன் லிடியன் நாதஸ்வரமும் கலந்து கொண்டார்.

லிடியன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது முதலே, தனது அசாத்திய திறமையால் ரசிகர்கள் பலரின் பாராட்டுதலைப் பெற்று இறுதிச் சுற்றில் சம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நடுவர்கள் பங்கேற்ற இறுதி நிகழ்ச்சியில் இரண்டு பியானோக்களை ஒரே நேரத்தில் வாசித்து இசைக் கலைஞர்களை மகிழ்வித்து பட்டத்தை வென்ற லிடியனுக்கு 1 மில்லியன் டொலர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சாதனையை லிடியன் செய்தபோது சிறுவனின் தந்தை வர்சனும் அரங்கில் உடனிருந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் லிடியனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் மாதவன், சூர்யா உட்பட திரைப்பட கலைஞர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.