இரண்டரை ஏக்கர் நிலத்தை அபகரிப்பதற்காக மாற்றுத்திறனாளிக்கு ஹெச்.ஐ.வி ஊசிபோட்ட நபர்!

தமிழகம் திருவண்ணாமலை ஈச்சங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. அவரின் மகன் 19 வயதான வெங்கடேசபெருமாள், வாய் பேச முடியாத மூளை வளர்ச்சி இல்லாத மாற்றுத்திறனாளி.

அந்த மாற்றுத்திறனாளிக்கு ஹெச்.ஐ.வி.ரத்த ஊசியை அதே பகுதியைச் சேர்ந்த அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர் ஒருவர் போட்டுவிட்டதாக மாவட்ட கலெக்டரிடம் கண்ணீருடன் தெரிவித்துள்ளார் இளைஞரின் தந்தை.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

கடந்த டிசம்பர் மாதம் பெற்றோர் வீட்டில் இல்லாதபோது, அந்த மாற்றுத்திறனாளி இளைஞருக்கு டிரைவர் செல்வகுமார் ஊசி போட்டுள்ளார். அதை அறிந்த தந்தை ஏன் `அவனுக்கு ஊசிபோட்டாய் என கேட்டபோது ஜுரம் இருந்துச்சு. அதான் போட்டேன் என ஓட்டுநர் கூறியுள்ளார்.

சிலநாட்கள் கழித்து ஊசி போட்ட இடத்தில் கட்டியாக மாறியதால் வலிதாங்க முடியாமல் மகன் அவஸ்தைப்பட்டபோது, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பெற்றோர் காண்பித்துள்ளனர். வைத்தியசாலையில் ரத்தப் பரிசோதனை செய்தபோது குறித்த இளைஞருக்கு ஹெச்.ஐ.வி இருப்பது தெரியவந்துள்ளது.

மகனிற்கு எப்படி ஹெச்.ஐ.வி வந்தது என பெற்றோர் பரிதவித்து வைத்தியசாலையில் கேட்டபோது `அப்பா அம்மாவுக்கு இருந்துச்சுனா பிள்ளைகளிற்கு வரும். அப்படி இல்லையென்றால், சிலர் பயன்படுத்தப்பட்ட ஊசிகள் மூலம் வரும். அதுவும் இல்லை என்றால் ஹெச்.ஐ.வி ரத்தத்தை ஊசி மூலம் யாராவது உங்க மகனுக்கு போட்டிருக்க வேண்டும்' என கூறியுள்ளனர்.

உடனே, பெற்றோர்கள் இருவரும் ரத்தப் பரிசோதனை செய்தபோது அவர்களிற்கு எந்த நோயும் இல்லை என கூறியுள்ளனர். அதன் பின்னர்தான் தந்தைக்கு தன் மகனிற்கு ஓட்டுநர் ஊசிபோட்டது நினைவுக்கு வந்துள்ளது. அவரிடம் சென்று என் மகனுக்கு என்ன ஊசி போட்டாய்? ஹெச்.ஐ.வி இருக்குனு வைதியசாலையில் சொல்கின்றார்கள் என கூறியபோது அந்த ஓட்டுனர் மழுப்பியுள்ளதாக தந்தை கூறியுள்ளார்.

அதன்பின்னரே அந்த தந்தைக்கு தன் சொத்துக்காகத்தான் இப்படியெல்லாம் ஓட்டுநர் செய்துள்ளார் என சந்தேகம் தோன்றியுள்ளது. அவர்களிற்கு சொந்தமாக 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. அதை, அதை ஓட்டுநர் உட்பட பலர் கேட்டபோதும் அவர்கள் கொடுக்கவில்லை.

இதன்காரணமாக மூளை வளர்ச்சி இல்லாத வாய் பேச முடியாத தன் மகனைக் கொலை செய்துவிட்டால் சொத்தை வாங்கிவிடலாம் என நினைத்து மகனிற்கு இப்படி ஹெச்.ஐ.வி ஊசியைப் போட்டுள்ளதாக தந்தை தெரிவித்துள்ளார்.

இதேவேளை `மாற்றுத்திறனாளியான இளைஞருக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு உள்ளது. இது எப்படி அவருக்குப் பரவியது என்பது தெரியவில்லை. அவரின் பெற்றோர் கூறுவது போன்று ஊசி மூலம் ரத்தம் ஏற்றியதால் பரவியதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றதோடு பாதிக்கப்பட்டவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றதாகவும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.