வைகோவிற்கு வழங்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைப்பு!

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவிற்கு வழங்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை விசாரணை முடியும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தேச துரோக வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து வைகோ, மேன்முறையீடு செய்திருந்த நிலையில், குறித்த மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த விசாரணையின்போது, இந்தியாவின் ஒருமைப்பாடு பாதிக்காத வகையில் சிந்தித்து பேச வேண்டும் என நீதிபதிகள் வைகோவிற்கு அறிவுறுத்தினர்.

அத்துடன் மேல்முறையீடு மனு தொடர்பாக ஆயிரம் விளக்கு பகுதி பொலிஸ் ஆய்வாளர் பதிலளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அதோடு , வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை விசாரணை முடியும் வரை நிறுத்தி வைத்தும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

கடந்த 2009ஆம் ஆண்டு ‘நான் குற்றம்சாட்டுகின்றேன்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த வைகோ, மத்திய அரசுக்கு எதிராகவும், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் உரையாற்றியிருந்தார்.

இதன்காரணமாக ஆயிரம் விளக்கு பொலிஸார் வைகோ மீது தேச துரோக வழக்கினை பதிவுசெய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையில் வைகோவிற்கு ஓராண்டு சிறையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதேவேளை சிறப்பு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை எதிர்த்து வைகோ உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.