கட்டியணைத்தபடி மண்ணில் புதைந்த சிறுமிகள்- பரிதாபமாக பலி!

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சகோதரிகள் இருவர் கட்டி அணைத்தபடி இறந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று ஏற்பட்ட நிலச்சரிவில் கிட்டத்தட்ட 40 வீடுகள் அழிந்துள்ளன.

இந்த நிலச்சரிவில் குழந்தைகள் பொதுமக்கள் என பலரும் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இன்னும் மாயமானவர்களை தேடும் பணியும் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மீட்பு படையினர் கட்டியணைத்தபடியே இறந்து கிடந்த சகோதரிகளின் உடல்களை மீட்டுள்ளனர்.

நிலம்பூர் நகரிலிருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ள சிறிய காவலப்பரா கிராமத்தை சேர்ந்தவர்கள் விக்டர் – தோம்மா தம்பதியினர். இவர்களின் வீடு மலையின் உச்சிப்பகுதியில் அமைந்துள்ளது. அந்த வீட்டில் தச்சு மற்றும் ஓவியராக வேலை செய்துவரும் இரண்டு சகோதரர்கள், அவர்களின் மனைவிகள், மற்றும் ஐந்து குழந்தைகள், வசித்து வந்துள்ளனர்.

தினமும் இரவு உறங்கும் போது அனகா மற்றும் அலீனா என்கிற சகோதரிகள் இருவரும் ஒரே கட்டிலில் எப்பொழுதும் உறங்கி வந்துள்ளனர்.

இந் நிலையில், சம்பவம் நடைபெற்ற அன்றும் கைக்குழந்தை உட்பட மூன்று குழந்தைகளை தம்பதியினரால் காப்பற்ற முடிந்தபோதும், துரதிஷ்டவசமாக இந்த இரண்டு குழந்தைகளும் மண்சரிவில் சிக்கிக்கொண்டனர்.

இந் நிலையில் தீவிரமான தேடுதல் வேட்டை நடத்திய மீட்பு படையினர், கட்டியணைத்தபடியே மண்ணில் புதைந்திருந்த சகோதரிகளின் உடல்களை மீட்டுள்ளனர்.

கடந்த திங்கள்கிழமை , மலப்புரம் மாவட்டம் பூத்தனத்தில் உள்ள செயின்ட் மேரி தேவாலயத்தில் இரண்டு இளம் குழந்தைகளின் உடல்கள் அடுத்தடுத்த பெட்டிகளில் வைக்கப்பட்டன. நான்கு வயது அனகாவின் முகம் தெரிந்த நிலையிலும், எட்டு வயது அலீனா முகம் தெரியாத அளவிற்கு முழுமையாக மூடப்பட்டிருந்தது.

அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் மரியாதை செலுத்துவதற்காக சுமார் ஒரு மணி நேரம் இரு சகோதரிகளினதும் சடலங்கள் தேவாலயத்தில் வைக்கப்பட்ட பின்னரே இருவரின் உடல்களும் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இரு சிறுமிகளின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தனை ஏற்படுத்தியுள்ளது.