தலைமைச் செயலக வளாகத்தில் பெரும் பரபரப்பு : படாதபாடுபட்ட தீயணைப்பு வீரர்கள்! அப்படி என்ன நடந்தது?

தலைமைச் செயலக வளாகத்தில் நல்ல பாம்பு புகுந்துவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புதருக்குள் நுழைந்துவிட்ட அந்த பாம்பினை, தீயணைப்பு வீரர்கள் படாதபாடு பட்டு பிடித்துவிட்டனர்.

பொதுவாக தலைமை செயலக வளாகத்துக்குள் அடிக்கடி பாம்புகள் வந்துவிடும். அனல் தெறிக்கும் விவாதங்கள் உள்ளே நடைபெற்று கொண்டிருந்தபோதும், அங்குள்ள நுழைவு வாயில்களில் பாம்புகள் ஊர்ந்து செல்வது நிகழும்.

தலைமை செயலகம் சுற்றிலும் நிறைய மரங்கள், புதர்கள் உள்ளதால் இப்படி பாம்புகள் உள்ளே நுழைந்துவிடுவதாக கூறப்படுகிறது. இதனால் தலைமை செயலக ஊழியர்களிடையே அடிக்கடி பரபரப்பும், பீதியும் ஏற்பட்டு விடும்.

இன்றும்கூட தலைமை செயலக வளாகத்தில் பாம்பு புகுந்துவிட்டது. 4-வது நுழைவாயிலில் படமெடுத்தபடி ஒரு நல்ல பாம்பு படுத்து கிடந்ததை கண்டதும், ஊழியர்கள் தலைதெறிக்க ஓடினார்கள்.

இதையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அந்த நல்ல பாம்பு அங்குள்ள புதருக்குள் நுழைந்துவிட்டதால், அதனை தேடும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக இறங்கினர். கிட்டத்தட்ட 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அந்த பாம்பினை வீரர்கள் பிடித்து கொண்டு போனார்கள். இதன்பின்னரே, அங்கு பரபரப்பு சூழல் தணிந்து இயல்பு நிலை திரும்பியது.