நளினியின் கோரிக்கை மறுப்பு!

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினிக்கு வழங்கப்பட்ட பரோலை அக்டோபர் 15-ஆம் திகதி வரை நீடிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்வதற்காக ஒரு மாதம் பரோல் வழங்கி கடந்த ஜூலை 5ம் திகதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி ஜூலை 25 முதல் பரோலில் வந்த நளினிக்கு , மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், அக்டோபர் 15 வரை தனக்கு பரோல் நீட்டிப்பு வழங்க கோரி நளினி தரப்பில் மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி மகளின் திருமண ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும், இலங்கையில் உள்ள தனது மாமியார் விசா பிரச்சினை காரணமாக இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த மனுவில் நளினி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணங்களை கூறி பரோல் நீட்டிப்பு வழங்க கோருவதாக கூறி, பரோல் நீடிக்க அரசுத்தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

முதலில் மனுதாரர் நேரில் ஆஜரானார், அவருக்கு பரோல் வழங்கப்பட்டது. இரண்டு வாரங்கள் பரோல் நீட்டிப்பு கோரிய போது மூன்று வாரங்கள் பரோல் வழங்கப்பட்ட நிலையில் தற்போதும் நீட்டிப்பு வழங்க கோரியுள்ள நிலையில் சட்ட விதிகளுக்கு உட்பட்டே நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியும் என, கூறிய நீதிபதிகள் பரோல் நீட்டிப்பு வழங்க மறுத்துள்ளனர்.

இதையடுத்து மனுவை திரும்பப் பெறுவதாக நளினி தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.