இறப்பிலும் இணைபிரியாத இனிய தம்பதி

மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவனும் இறந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் இறுதிச் சடங்கை பிள்ளைகள் நடத்தியுள்ளனர்.

இத்துயர சம்பவம் தமிழகத்தின் சென்னையில் இடம்பெற்றுள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டை, சஞ்சீவிராயன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் 65 வயதான லோகநாராயணன் . இவரின் மனைவி ராஜேஸ்வரி (62). இவர்களுக்கு 3 மகன்கள், 2 மகள்கள். அனைவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில் லோகநாராயணனும் ராஜேஸ்வரியும் தனியாக வசித்துவந்தனர்.

இந்நிலையில் அவர்களின் வீட்டின் கதவு நீண்டநேரமாகியும் திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் எட்டிப்பார்த்தபோது லோகநாராயணனும் அவரின் மனைவியும் படுத்திருந்தது தெரிந்தது.

இதையடுத்து, அவர்களின் பிள்ளைகளுக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் இறந்துகிடந்தமை தெரியவந்தது.

இதுகுறித்து லோக நாராயணன் குடியிருக்கும் பகுதியில் வசிப்பவர்கள் கூறுகையில்,

சென்னை மாநகராட்சியில் வரிவசூலிக்கும் ஊழியராக பணியாற்றிய லோகநாராயணன், மனைவி ராஜேஸ்வரி மீது அதிக பாசம் கொண்டவர். இருவரும் ஒற்றுமையாக இருப்பார்கள். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்துப் பேசமாட்டார்கள். எங்கள் தெரு மக்களுக்கு முன்மாதிரியான தம்பதியாக இருவரும் வாழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மகன்கள், மகள்களுக்கு திருமணமாகியபிறகு அவர்கள் அனைவரும் தனித்தனியாக வசித்துவருகின்றனர். லோக நாராயணனும் அவரின் மனைவி ராஜேஸ்வரியும் இந்த வீட்டில் குடியிருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் ராஜேஸ்வரிக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், இதனையடுத்து லோகநாராயணன் மனவேதனையடைந்து காணப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஜேஸ்வரிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட பிறகு லோகநாராயணன்தான் வீட்டு வேலைகளைச் செய்து வந்ததாகவும் குறிப்பிட்ட அயலவர்கள், மனைவி இறந்த துக்கத்தில் கணவர் இறந்துள்ளதாகவும், ஒற்றுமையாக வாழ்ந்த இந்தத் தம்பதி இறப்பிலும் பிரியவில்லை எனவும் கவலையுடன் குறிப்பிட்டுள்ளனர்.