தேனிலவுக்காக வெளிநாட்டுக்குச் சென்ற தமிழகத்தை சேர்ந்த புதுமண ஜோடிக்கு...கொரோனவால் வந்த சோதனை!

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஆணையம்பட்டியைச் சேர்ந்த புதுமண தம்பதி, கடந்த பத்து நாள்களுக்கு முன்பு தேனிலவுக்காக இந்தோனேஷியா நாட்டிற்குச் சென்றிருந்தனர். கடந்த 17ம் தேதி அவர்கள் சொந்த ஊர் திரும்பினர்.

கரோனா தொற்றிலிருந்து காத்துக் கொள்ளும் வகையில், வெளிநாட்டினர் அல்லது வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியவர்கள் யாராவது இருந்தால், அவர்கள் தாங்களாகவே மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் ஆணையம்பட்டி கிராம மக்கள், தேனிலவுக்குச் சென்று திரும்பிய புதுமண ஜோடி குறித்து கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்குத் தகவல் அளித்தனர். அதன்பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று புதுமண ஜோடிக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனர்.

இந்த பரிசோதனையில், அவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை என்பது தெரிய வந்தது. என்றாலும், அவர்களை அவர்களுடைய வீட்டின் மூன்றாவது தளத்தில் இருவரையும் தனிமைப்படுத்தி வைத்து, அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர்கள் வெளியில் சென்று விடக்கூடாது என்பதற்காக காவல்துறையினரும் வீடு அருகே சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர்.

அதேபோல், கெங்கவல்லி அருகே வீரகனூரைச் சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்டோர் கடந்த பத்து நாள்களுக்கு முன்பு துபாய், மலேசியா ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்தனர். அவர்கள் இன்னும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமலும், தனிமைப்படுத்தப்படாமலும் தொடர்ந்து வெளியே நடமாடி வருவதால் உள்ளூர் மக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.

சுகாதாரத்துறையும், காவல்துறையினரும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.