கேரளா விமான விபத்து: சிகிச்சைபெற்று வருபவர்களில் 22 பேரின் உடல்நிலை கவலைக்கிடம்

கேரளா விமான விபத்தில் சிக்கி சிகிச்சைபெற்று வருபவர்களில் 22 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகின்றது.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயிலிருந்து 174 பயணிகள், 10 குழந்தைகள், 5 விமான ஊழியர்கள், 2 விமானிகள் என 191 பேருடன் கேரளாவிற்கு வந்தது.

விமானம் தரையிரங்கிய போது ஓடுதளத்தில் இருந்து விலகியதால் விபத்தில் சிக்கியதாகவும், மற்றொரு புறம் விமானம் கன மழை காரணமாக, மோசமான வானிலையால் தரையிறங்கும்போது ஓடு தளத்தில் இருந்து விலகி 35 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

விமான விபத்திற்கான சரியான காரணம் இன்னும் சரிவர தெரியவில்லை. இருப்பினும் இந்த விபத்து காரணமாக விமானி, துணை விமானி உள்பட இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர்.

அத்துடன் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் 149 பேர் மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 22 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும், 22 பேர் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மலப்புரம் மாவட்டத்தின் ஆட்சியர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தற்போது சம்பவம் நடந்த இடத்தில் விபத்துக்கான காரணம் குறித்து விமான விபத்து விசாரணை பணியகம், விமானப் போக்குவரத்து ஆணையகம், விமானப் பாதுகாப்புத் துறை உள்ளிட்டவற்றை சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், விமான விபத்து விசாரணை பணியகத்தை சேர்ந்த அதிகாரிகள் விபத்தில் சிக்கிய விமானத்தின் கருப்புப் பெட்டியை பத்திரமாக மீட்டுள்ளதாகவும் அது டெல்லிக்கு எடுத்துச்செல்லப்பட்டு மேலதிக ஆய்வுக்கு உட்படுத்தப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.