மதுரை மீனாட்சி அம்மன் கோவில்: முதன்முறையாக வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்!

தமிழகத்தின் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில், 7 ஆம் நூற்றாண்டில் செங்கல் சுண்ணாம்பாலும், 13 ஆம் நூற்றாண்டில் கருங்கல்லாலும் கட்டப்பட்டதாக கல்வெட்டு ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இக்கோவிலில் உள்ள 410 கல்வெட்டுகளை படியெடுத்து விவரங்களை கூற, தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் நியமிக்கப்பட்டு இருந்தார்.

கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்த ஆய்வுப்பணியின் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,1250 - ல் நிகழ்ந்த இயற்கை பேரிடரின்போது கோவில் கருவறை அழிந்தது என்றார்.

கோவில் உருவானது முதல் சாமியின் பெயர் திரு ஆலவாய் உடைய நாயனார் நம்பி என்றே அழைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அதன்பின்னர் 1898 - ஆம் ஆண்டிற்கு பின், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் என பெயர் மாற்றம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் கல்வெட்டுகளின் ஆதார தகவல்கள், விரைவில் நூலாக வெளியிடப்படும் என்றும் சாந்தலிங்கம் தெரிவித்தார்.