புது மாப்பிள்ளைக்கு எமனான ஊசி; சோகத்தில் குடும்பம்

காய்ச்சலுக்கு ஊசி போட்ட புது மாப்பிள்ளை ஒருவர் திடீரென்று மயங்கிவிழுந்து உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த பகுதியில் வசித்துவந்த 24 வயதான முகேஷ் என்பவருக்கும் இவரது தாய்மாமா மகளுக்கும் திருமணம் முடிந்து ஒன்றரை மாதம் ஆகியுள்ளது.

இந்நிலையில் முகேஷுக்கு காய்ச்சல் மற்றும் இருமல் தொந்தரவு ஏற்பட்டதால் தளவாய்புரம் கூட்டுறவு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர் ஊசி போட்ட பிறகு, அவருக்கு உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டதையடுத்து மருத்துவர் வேறு ஊசி போட்டுள்ளார்.

இதையடுத்து உடனே உடல் சோர்வு ஏற்பட்டு மகேஷ் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இந்நிலையில் அங்கிருந்து உடனடியாக இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

சாதாரண காய்ச்சலுக்காக ஊசி போட சென்ற முகேஷ் திடீரென உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அவரது இறப்பில் மர்மம் உள்ளதாக கூறிய உறவினர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றதாக கூறப்படுகின்றது.