வறுமையில் வாடும் குடும்பஸ்தர்- பாராமுகம் காட்டும் அதிகாரிகள்! சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களா?

யாழ்ப்பாணம் - காரைநகர், களபூமி மருதபுரம் பிரதேசத்தில் வசிக்கும் வேலன் இராசேந்திரம். 42 வயதாகும் அவரிற்கு 17 வயதிலும் 13 வயதிலும் இரண்டு பெண் பிள்ளைகளும் 10 வயதான ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த பல வருடங்களாக எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் வயதான தாய், தந்தையருடனும் மனைவி பிள்ளைகளுடனும் ஓலைக்குடிசையில் வாழ்ந்து வருகின்றதாகவும், 1981 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து, 1998 ஆம் ஆண்டு மீளக்குடியேறின நாளில் இருந்து குடிசையில் தான் தங்கள் வாழ்க்கை நகர்கிறதாகவும் அவர் கூறியுள்ளார்.

மழையும் பொய்த்து விட்டதால் ஜீவனோபாயமான விவசாயத்தையும் செய்ய வழியில்லை, காலநிலை மாற்றங்கள் காரணமாக கடற்றொழிலும் கைகொடுக்கவில்லை என்பதால் குடும்பச் சுமையால் மனைவியும் கூலித் தொழிலுக்கு செல்கின்றநிலையில், வாழ வழியின்றிப் பெற்ற நுண்கடனையும் செலுத்த முடியாமல் வறுமையில் வாடுவதாக கவலை வெளியிட்டுள்ளார்.

அதோடு காசு கொடுத்து வாங்கிக் குடிக்கும் அவல நிலையில் உள்ளதாகவும், போக்குவரத்து வசதிகளும் இல்லாததால், பிள்ளைகள் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் நடந்தே பாடசாலைக்கு போய் வருகின்றார்கள். அவர்களை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் இருக்கிறது, அதற்கான வழி தான் தெரியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

வயதான தாய், தந்தையைக் கவனிக்கக்கூட கையில் காசில்லாமல் அவதிப்படும் அவரை ,எந்த அரசியல்வாதியும் திரும்பிப் பார்க்கவில்லை. வீடாவது கட்டித்தரக் கேட்டதாகவும், தேர்தல் வருவதாலோ என்னவோ, வாக்குறுதிக் கடிதங்கள் மாத்திரம் வருகின்றதாகவும் மற்றபடி, கவனிப்பாரின்றி இப்படியே வாழ்க்கையை நகர்த்தி வருகின்றோம் என வேலன் இராசேந்திரம் தெரிவித்துள்ளார்.

சம்பத்தப்பட்டவர்களின் கவனத்திற்கு இது செல்லுமா?