விடுதலைப் புலிகள் இப்படியா செய்வார்கள்......?

தற்போது வடபுலத்தில் அனைவரது கவனத்தையும் தன்பால் ஈர்த்திருப்பது ஒரு துண்டு பிரசுரம். ஆம் வவுனியாவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட துண்டுபிரசுரங்கள் பல இடங்களிலும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

குறித்த துண்டு பிரசுரங்களை யார் இதுவரையில் விநியோகித்தார்கள் என்பது குறித்து பொலிஸாரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் தனது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு விடயங்களை முன்வைத்து குறித்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

ஒன்றில், “தமிழீழத்தில் ஒரு பெண் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. மீறி தவறிழைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இரண்டு வார காலம் அவகாசம் வழங்கப்படுவதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றைய துண்டுப்பிரசுரத்தில், வவுனியாவுக்கான முக்கிய அறிவித்தல்! என்ற தலையங்கத்தில்,

“தமிழீழத்திற்காக உயிரிழந்தவர்கள் கண்ட கனவுகள் உண்மையாகும் நேரம் வந்து விட்டது. இன்னும் நாங்கள் முற்றாக அழிந்து விடவில்லை.” போன்ற பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த இந்த துண்டுப்பிரசுரத்தின் உண்மைநிலை பற்றி ஆராய வேண்டிய கடப்பாடு உடையவர்களாக தற்போது நாம் உள்ளோம்.

தமிழை தனது மூச்சாக சுவாசித்து, அதற்காகவே உயிர்வாழ்ந்து, அதற்காகவே உயிர்துறந்த உயரிய தமிழ் கலாச்சாரத்தை கொண்டவர்களால்

இத்தனை எழுத்துப் பிழைகளுடனும், இலக்கணப் பிழைகளுடனும் ஒரு கடிதம் எழுத முடியுமோ? என்ற கேள்வி அனைவரது மனதிலும் துளிர்விட்டுள்ளது.

தமிழுக்காக போராடி மூன்று தசாப்த காலங்கள் இன்னுயிர் பலவற்றை துச்சமாய் நினைத்து, மனிதம் மறந்த மனிதத்தில் கூட தமிழை விதைத்தவர்களால், செந்தமிழில் தனக்கு நிகர் வேறொருவர் இல்லை என்ற அந்த கற்றுத் தேர்ந்தவர்களின் வசன நடைகூட சற்றிலும் பொருந்தா வண்ணம் இவ்வாறான துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டிருப்பது அனைவரது மனதிலும் தற்போது ஒரு குழப்ப நிலையை தோற்றுவித்துள்ளது எனலாம்.

உண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழை எடுத்தியம்புவது என்பது அவ்வளவு இலகு அல்ல.

செந்தமிழையும், பழந்தமிழையும் ஒருசேர மொழி பிறழா வசன நடையில் கற்றுத்தேர்ந்த ஒரு சமுகத்தினாரால் மக்களுக்கு ஒரு செய்தி வழங்கப்படுமெனில் அதுவும் தமிழ் மக்களுக்கு வழங்கப்படுகின்றது எனில் அதனுள் இத்தனை எழுத்துப்பிழைகளை அவதானிக்க முடியாது.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் தனது பயன்பாட்டில் சுத்தத் தமிழை அன்றி கலப்படத் தமிழையோ அல்லது ஆங்கிலப் பயன்பாட்டையோ சற்றும் புகுத்தியதில்லை.

உலகமே வியக்கும் அளவுக்கு தமிழ் மீது அதீத காதல் கொண்டவர்களின் இலட்சினையைப் பயன்படுத்தி இவ்வாறானதொரு துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது என்பது சுற்றியுள்ள புல்லுருவிகளின் செயற்பாட்டை எடுத்துரைப்பதாய் அமைகின்றது.