எங்களுக்கு என்றைக்குமே ஓய்வு கிடையாது... இது வெள்ளையுடை வீரர்களின் காலம்!

`மருத்துவராக இருப்பவர்கள் அவர்களின் வாழ்நாளுக்கும் மருத்துவர்கள்தான். எங்களுக்கு என்றைக்குமே ஓய்வு கிடையாது’

கொரோனா தாக்கத்தால், பெரும் இழப்பைச் சந்தித்துக்கொண்டிருக்கும் இத்தாலிக்குத் தனது மருத்துவர்கள் படையை அனுப்பிக் கைகொடுத்திருக்கிறது கியூபா.

வெனிசுலா, நிகராகுவே, ஜமைக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் கியூபாவிலிருந்து சிறு சிறு குழுக்களாக மருத்துவர்கள், மருந்துகளுடன் சென்றிருக்கிறார்கள். இந்தச் சூழலில் தனது ஆறாவது மருத்துவர் குழுவை மருந்துகளுடன் இத்தாலிக்கு அனுப்பியிருக்கிறது அந்த நாடு.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்று, கரீபியத் தீவுகளின் மிகச்சிறிய நாடு ஒன்றிடமிருந்து உதவி பெற்றிருப்பது ஆச்ச யம்தான். இத்தனைக்கும் கியூபாவில் 40 கொரோனா வைரஸ் நோயாளிகள் உறுதிசெய்யப்பட்டிருக்கிறார்கள். ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் இருக்கிறார்கள். ஒரு மாதத்துக்கு முன்பே தனது நாட்டுக்குச் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு அந்த நாடு தடைவிதித்திருந்தது.

அதனால் நோய் பரவுதல் ஓரளவுக்குக் கட்டுக்குள் இருக்கும் என அந்த நாடு நம்பிக்கையுடன் இருக்கிறது. இருந்தும் கியூபா மீது பல்வேறு வரிகளை அமெரிக்க அரசு கடந்த மாதம் விதித்திருந்தது. இது அந்த நாட்டுக்குப் பெரும் பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்தும்.

இத்தனை நெருக்கடிகளுக்கும் இடையில்தான் தனது இண்டர்ஃபெரான் மருந்துடன் பல்வேறு நாடுகளுக்குப் பயணப்பட்டிருக்கிறார்கள் கியூபாவின் வெள்ளை உடை ராணுவ வீரர்கள்.

1981ல் கியூபா, டெங்கு நோய்த்தொற்றால் பெரும் இழப்பைச் சந்தித்தது. 150-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தார்கள். அதுவரை கரீபியத் தீவுகளைப் பாதிக்காத டெங்கு, அமெரிக்காவால்தான் அங்கு பரப்பப்பட்டதாக பிடல் காஸ்ட்ரோ குற்றம் சாட்டினார்.

அந்தச் சூழல் கொடுத்த நெருக்கடியால் தனது மருத்துவத் துறையை வலுப்படுத்த முனைந்தது கியூபா. 2019ம் ஆண்டின் கணக்கீட்டின்படி அங்கே ஒவ்வொரு 150 குடிமக்களுக்கும் ஒரு மருத்துவர் இருக்கிறார். கூடவே தனது உயிர்தொழில்நுட்பவியல் (Biotech) பிரிவையும் வலுப்படுத்தத் தொடங்கியது அந்த நாடு.

loading...