இந்த ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா பாதிக்கும் வாய்ப்பு குறைவு!

ஓ குரூப் ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது என சமீபத்தைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கொரோனா ஆபத்து காரணிகளை அடையாளம் காண விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகலை நடத்தி வருகிறார்கள்.

கொரோனா ஆபத்தை முன்னறிவிப்பதில் "இரத்த வகையின் சாத்தியமான பங்கு குறித்து 2 ஆய்வுகள் நடைபெற்றன.

ஓடென்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனை மற்றும் தெற்கு டென்மார்க் பல்கலைக்கழகம் இந்த ஆய்வுகளை நடத்தியது.

வேறு எந்த இரத்த வகையையும் விட 'ஓ' இரத்தக் பிரிவு உள்ளவர்கள் குறைவாக பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பது ஆய்வில் தெரியவந்து உள்ளது.

இரண்டு ஆய்வுகளிலும் ஓ ரத்தப்பிரிவை சேர்ந்தவர்கள் கொரோனா அல்லது சார்ஸ், கோவ்-2 நோய்த்தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து குறைவாக இருப்பதாக தெரியவந்து உள்ளது.

இந்த புதிய ஆய்வுகள் கொரோனாவுடன் இரத்த வகைக்கும் பாதிப்புக்கும் இடையிலான சாத்தியமான தொடர்புக்கான சான்றுகளை வழங்கினாலும், இருந்தாலும் கொரோனா தொற்று ஏன் ஏற்படுகிறது என்பதை அறிந்துகொள்ள கூடுதல் ஆராய்ச்சி தேவை என்று அறிவியல் இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களை பரிசோதித்ததில் ஓ ரத்தப்பிரிவை சேர்ந்தவர்கள் கணிசமாகக் குறைவாகவே காணப்பட்டனர்" என்றும், "மாறாக, அதிகமாக ஏ, பி மற்றும் ஏபி ரத்த பிரிவை நபர்கள் காணப்பட்டனர்" என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

அதாவது, ஏ, பி, அல்லது ஏபி இரத்த வகைகளைக் கொண்ட நபர் கொரோனா நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அதிக ஆபத்தில் இருக்கிறார்கள்.

இருப்பினும், ஆராய்ச்சியாளர்கள் ஏ, பி மற்றும் ஏபி வகைகளுக்கு இடையிலான தொற்று விகிதத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாட்டைக் காணவில்லை.

இந்த ஆய்வு ஏபிஓ இரத்தக் குழுவை சார்ஸ், கோவ்-2 நோய்த்தொற்றுக்கான ஆபத்து காரணியாக அடையாளப்படுத்துகிறது.

மற்றொரு சமீபத்திய ஆய்வில், ஓ அல்லது பி இரத்தக் குழுக்களுடன் ஒப்பிடும்போது. ஏ அல்லது ஏபி இரத்தப்பிரிவை சேர்ந்த கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு உள்ள நோயாளிகளுக்கு செய்ற்கை சுவாசம், சி.ஆர்.ஆர்.டி மற்றும் ஐ.சி.யுவில் நீண்ட காலம் தங்குவதற்கான அதிக ஆபத்து உள்ளது. அவர்களுக்கு கொரோனாவால் அதிக நுரையீரல் பாதிப்பு இருப்பதாகக் கூறுகிறது.

சிறுநீரக செயலிழப்புக்கு டயாலிசிஸ் தேவைப்படும் இரத்தக் குழு ஏ மற்றும் ஏபி நோயாளிகளையும் அவர்கள் கண்டறிந்தனர்.

இதன் பொருள், இரத்தக் குழு ஓ ரத்தப்பிரிவு உடையவர்களுக்கு கொரோனா கடுமையான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பில்லை.

"இந்த கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படை உயிரியல் வழிமுறைகளை வரையறுக்க மேலும் ஆராய்ச்சி தேவை" என்று அது கூறியது. இந்த ஆய்வை பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் நடத்தி உள்ளது.

இந்த இரண்டு ஆய்வுகள், ஏ மற்றும் ஏபி ஆகிய இரண்டு இரத்தப் பிரிவுகளில் உள்ள நோயாளிகளுக்கு கொரோனா காரணமாக உறுப்பு செயலிழப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கலாம் என்று கூறுகிறது.

இரத்த வகை ஓ ரத்தப்பிரிவு உள்ளவர்கள் உலகளாவிய ரத்த நன்கொடையாளர்கள் - அவர்கள் தங்கள் இரத்தத்தை அனைத்து பிரிவு ரத்த குழுக்களுக்கும் தானம் செய்யலாம். இருப்பினும், அவர்கள் ஓ வகை இரத்தத்தை மட்டுமே பெற முடியும்.

இரத்த வகை ஓ பிரிவு உடையவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான ஆபத்து குறைவு என்று சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.