பரவும் புதிய கொரோனாவுக்கு தடுப்பூசி வேலை செய்யாமல் போகலாம்... ஆராய்ச்சியில் பகீர் தகவல்!

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனாவுக்கு எதிராகத் தடுப்பூசிகள் பலனளிக்காமல் போகலாம் என்று புதிய ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது.

உலகெங்கும் கொரோனா பரவல் கடந்த சில மாதங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வேகமாகப் பரவும் பிரிட்டன் வகை கொரோனா தற்போது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல தென் ஆப்பிரிக்காவிலும் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் கண்டறியப்பட்ட இந்த உருமாறிய கொரோனா இதுவரை 12க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது.

தடுப்பூசி வேலை செய்யுமா?

தற்போதுள்ள தடுப்பூசிகள் இந்த உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக வேலை செய்யுமா என மக்களிடையே அச்சம் நிலவி வந்தது.

தடுப்பூசிகள் அனைத்தும் புதிய கொரோனா வகைகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது என்பதால் அவை வேலை செய்யுமா என்ற கேள்வி எழுந்தது.

பிரிட்டன் வகை கொரோனாவுக்கு எதிராகத் தடுப்பூசி வேலை செய்யும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

தென் ஆப்பிரிக்க வகை கொரோனா

இந்நிலையில், தற்போது நடத்தப்பட்ட புதிய ஆய்வில் தென் ஆப்பிரிக்கா வகை கொரோனாவுக்கு எதிராகத் தடுப்பூசி வேலை செய்யாமல் போகலாம் என்ற அதிர்ச்சி முடிவு கிடைத்துள்ளது.

புதிய கொரோனா வகைகள் பரவுவதற்கு முன், கடந்த செப்டம்பர் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ரத்த மாதிரிகளில் உருமாறிய கொரோனா செலுத்தப்பட்ட போது, அவை பலனளிக்கவில்லை.

பலன் அளிக்காமல் போகலாம்

இதேபோல மற்றொரு ஆய்வும் அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடத்தப்பட்டது. அதில் ஃபைசர் அல்லது மாடர்னா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களின் ரத்த மாதிரிகளில் உருமாறிய கொரோனா செலுத்தப்பட்டது.

அப்போது அவை உருமாறிய கொரோனாவுக்கு எதிராக மிகக் குறைவாகவே பலன் அளித்தது தெரியவந்தது. இதனால் உருமாறிய கொரோனாவுக்கு எதிராகத் தடுப்பூசிகள் வேலை செய்யாமலேயே போகலாம் என்று அஞ்சப்படுகிறது.

முன்னதாக, தென்னாப்பிரிக்காவில் தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனம் நடத்திய ஆய்விலும் இதே முடிவுகளே கிடைத்திருந்தது.

இறுதி முடிவு

மூன்று ஆராய்ச்சிகளிலும் ஒரே முடிவு கிடைத்துள்ளதால், இதுவே இறுதியாகக் கிடைக்கும் முடிவாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இவை அனைத்தும் ஆய்வகங்களில் ரத்த மாதிரிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் கிடைத்த முடிவுகள் என்று குறிப்பிட்ட ஆராய்ச்சியாளர்களில், இதில் இன்னு்ம அதிக ஆய்வுகள் தேவை என்றும் இறுதி ஆராய்ச்சியில் என்ன மாதிரியான முடிவுகள் வேண்டுமானாலும் கிடைக்கலாம் என்றும் தெரிவித்தனர்.