சர்வதேச ரோபாட்டிக்ஸ் போட்டியில் முதலிடம் பிடித்த இலங்கை மாணவர்களின் தொப்பி!

11வது சர்வதேச ரோபாட்டிக்ஸ் போட்டியில் இலங்கையின் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞானத் துறை மாணவர்கள் தயாரித்த ஹரிபொட்டர் தொப்பி முதலிடத்தை பிடித்துள்ளது.

பிரபலமான குழந்தைகள் திரைப்படத் தொடரான ​​ஹரிபொட்டர் திரைப்படத்தில் வரும் தொப்பியின் பெயரில் குறித்த தொப்பியை மாணவர்கள் தயாரித்திருந்தனர்.

தொப்பி பற்றி விளக்கிய பல்கலைக்கழக மாணவர்கள், “இந்த தொப்பி முழுமையாக கணினியின் உதவியுடன் செயற்படும் வடிவில் உருவாக்கபட்டுள்ளாதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த தொப்பியை யாரும் நெருங்கினால் சென்சர் மூலம் தெரிவிக்கப்படும் என்றும், மன இறுக்கம் கொண்ட குழந்தைகள் எப்போதும் இயல்பற்றவர்களாக, சமூகத்துடன் இணைந்தவர்களாக செயற்பட மாட்டார்கள் என்றும், அப்படியான குழந்தைகளிற்கு மன இறுக்கம் இருக்கிறதா என்பதைக் கண்டறியவும் இத்தொப்பி உதவுகிறதாகவும் மாணவர்கள் கூறியுள்ளனர்.

சர்வதேச ரோபாட்டிக்ஸ் போட்டி கடந்த நவம்பர் 26 முதல் 29 வரை ஸ்பெயினின் மாட்ரிட்டில் நடைபெற்றது.

இந்த போட்டியில் ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பல புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் இலங்கை மாணவர்களின் ஹரிபொட்டர் தொப்பிக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

இந்நிலையில் நேற்றிரவு குறித்த மாணவர் குழுவினர் இலங்கை திரும்பிய நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மாணவர்களிற்கு வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.