முதல்வராக இருந்தாலும் பரவாயில்லை இடைக்கால அறிக்கை குறித்த பகிரங்க விவாதத்திற்கு வருமாறும் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு

இலங்கையில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் அரசியலமைப்பில் தமிழர்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கக்கூடிய தீர்வுத் திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை மெதடிஸ் தேவாலய மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிமலன் சௌந்தரநாயகத்தின் 17ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டமைப்பின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.

புதிதாக தயாரிக்கப்பட்டு வருகின்ற அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையில் தமிழர்களுக்கான தீர்வுத் திட்டங்கள் எதுவும் கிடையாது என பலரும் குற்றஞ்சாட்டி வருவதாக எம்.ஏ.சுமந்திரன் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.

அவ்வாறு குற்றஞ்சாட்டி வருபவர்கள் தன்னுடன் இந்த புதிய அரசியலமைப்பு இடைக்கால அறிக்கை குறித்து பகிரங்க விவாதத்திற்கு வருமாறும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

முதலமைச்சராக இருந்தாலும், அமைச்சர்களாக இருந்தாலும், முன்னாள் அமைச்சர்களாக இருந்தாலும் அல்லது தேசியக் கொடியை ஏற்ற மறுப்பவர்கள் இருந்தாலும் தன்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறும் அவர் இதன்போது சவால் விடுத்திருந்தார்.

இதேவேளை, தமிழர்களினால் கோரப்பட்டுவந்த மாகாண சபைகளின் கீழான பொலிஸ் அதிகாரம் குறித்தும் இந்த இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமலன் சௌந்தரநாயகம் உயிரிழந்து 17 வருடங்களாக நினைவு கூராத இலங்கை தமிழரசு கட்சி, தேர்தல் காலம் நெருங்குகின்றமையினால் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளதாக பிரதேச இளைஞர்கள் ஆவேசமடைந்துள்ளனர்.

இதையடுத்து அந்த நிகழ்வில் சில நிமிடங்கள் அமளிதுமளி ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.