புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டமூல வரைவால் அமைச்சரவையில் கருத்து மோதல்

நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்து பயங்கரவாத தடுப்பு தொடர்பான புதிய சட்டத்தை கொண்டு வர அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இது சம்பந்தமான புதிய சட்டமூல வரைவை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன நேற்று அமைச்சரவையில் தாக்கல் செய்துள்ளதுடன், அதனை சில திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதிய சட்டமூலத்தில் அத்தியாவசியமான சில விடயங்கள் உள்ளடக்கப்படமை சம்பந்தமாக அமைச்சர்களான விஜேதாச ராஜபக்ச மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதன்போது திலக் மாரப்பன மற்றும் மங்கள சமரவீர ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளனர். இந்த அமைச்சர்களுக்கும் விஜேதாச ராஜபக்ச மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கொலை குற்றம் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என குற்றவியல் தண்டனை சட்டத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கொலை குற்றத்திற்கு ஆயுள் தண்டனை குறிப்பிட்டு உள்ளதாகவும் விஜேதாச ராஜபக்ச இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரிவினைவாதம் என்பது தண்டனை பெறக்கூடிய குற்றம் என்று குறிப்பிடப்படவில்லை என குறிப்பிட்டுள்ள விஜேதாச ராஜபக்ச, அது பாரதூரமான குற்றம் எனவும் கூறியுள்ளார்.

இதனிடையே பயங்கரவாதம் சம்பந்தமாக ஒருவர் வழங்கும் ஒப்புதல் வாக்குமூலத்தை சாட்சியமாக கொண்டு வழக்கு தொடர முடியாது என புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாகவும், இங்கிலாந்தின் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் ஒப்புதல் வாக்குமூலத்தை சாட்சியமாக கொண்டு வழக்கு தொடர முடியும் எனவும் விஜேதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.