10 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை செலுத்துமாறு வீரவங்சவுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்

மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு 10 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை செலுத்துமாறு, கொழும்பு வணிக மேல் நீதிமன்றம், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவுக்கு உத்தரவிட்டுள்ளது.

விமல் வீரவங்ச அவரது பெயரில் வெளியிட்ட நெத்த வெனுவட்ட எத்த என்ற புத்தகத்தின் மூலம் புலமைச் சொத்து சட்டத்தின் கீழ் தமது அடிப்படை உரிமையை மீறியுள்ளதாக குற்றம் சுமத்தி, ரில்வின் சில்வா தாக்கல் செய்திருந்த வழக்கின் தீர்ப்பை வழங்கிய வணிக மேல் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

விமல் வீரவங்ச மக்கள் விடுதலை முன்னணியில் அங்கம் வகித்த போது, முன்னணியின் நிறைவேற்றுச் சபையில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் யோசனைகளை உள்ளடக்கி இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளதாக ரில்வின் சில்வா நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீண்டகாலம் விசாரித்த கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் இன்று வழக்கின் தீர்ப்பை வழங்கியது. விமல் வீரவங்ச எழுதியதாக கூறப்படும் புத்தகத்தின் உண்மையான உரிமை, ரில்வின் சில்வாவுக்கே வழங்கப்பட வேண்டும் என தீர்ப்பில் கூறியுள்ளது.

இதற்கு அமைய விமல் வீரவங்ச, ரில்வின் சில்வாவுக்கு 10 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை வழங்க வேண்டும் என வணிக மேல் நீதிமன்ற நீதிபதி ருவான் பெர்னாண்டோ உத்தரவிட்டுள்ளார்.