பாக்யராஜ் மீண்டும் அதிரடி

எம்.ஜி.ஆரை வைத்து சினிமாவில் வளர்ந்த நடிகர்கள் ஏராளம். ஆனால் அந்த காலத்திலேயே அவரை வைத்து சினிமா, அரசியல் என இரண்டு குதிரைகளில் சவால் சவாரி செய்தவர் பாக்யராஜ். எங்கோ போயிருக்க வேண்டியவர் ஆனால் எப்படியோ இடறி விழுந்துவிட்டார்.

தனிக்கட்சி ஆரம்பித்து தரை தட்டி நின்றவர் பின் அ.தி.மு.க. அப்புறம் தி.மு.க. என்று பல முகாம்களில் தலைகாட்டினார்.

ஆனால் எந்த பப்பும் வேகவில்லை. இதனால் இடையில் சிறிது காலம் அரசியலிலிருந்து விலகி நின்றவர் இப்போது மீண்டும் அரசியலுக்குள் ரீ விசிட் அடிக்க வருகிறார்.

“அ.தி.மு.க. எனும் பேரியக்கம் ஜெயலலிதாவின் மறைவால் பலவீனமடைந்துவிட கூடாது என்கிற எண்ணம் எனக்குள் வந்துள்ளதால் இந்த ரீ என்ட்ரீ. ஆம் நான் மீண்டும் அ.தி.மு.க.வில்தான் இணையப்போகிறேன்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் நான் பங்கேற்ற போது அமைச்சர் செல்லூர் ராஜூ, நவநீதகிருஷ்ணன் எம்.பி. ஆகியோர் என்னை மீண்டும் கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டினர்.

முதல்வரும், துணை முதல்வரும் என்னை அதிகாரப்பூர்வமாக அழைத்தால் வருகிறேன் என்று சொல்லியிருந்தேன்.

இ.பி.எஸ்.ஸும், ஓ.பி.எஸ்.ஸும் இணைந்தது போல் தினகரனும் இவர்களுடன் இணைய வேண்டும் என எதிர்பார்க்கிறேன். விட்டுக் கொடுத்து செல்வதுதான் நல்ல தலைமையின் அழகு. புரட்சித்தலைவர் அதை அழகாக செய்வார்.

நான் கட்சியில் இணைந்ததும் இரண்டு தரப்பையும் இணைப்பதற்கான முயற்சிகளை செய்வேன்.

தினகரன் அ.தி.மு.க.வில் இணைந்தாலும் கூட அவரது குடும்பம் உள்ளே வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.” என்று சொல்லியிருக்கிறார் பாக்யராஜ்.

ஆக மறுபடியும் அரசியல் பரபரப்புக்கு அடிபோடுகிறார் பாக்யா. ராசுக்குட்டியும், எங்க சின்ன ராசாவும்! இந்த கால சினிமாக்கள் அல்ல.

அன்று வெற்றி பெற்ற அவற்றை இப்போது ரீமேக் செய்தால் வேலைக்காகாது என்பதை பாக்யராஜ் புரிந்து கொள்ள வேண்டும்.