முறையற்ற விதத்தில் கட்டப்படும் கட்டடங்களுக்கு எதிராக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!

முறையற்ற விதத்தில் கட்டடம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு அனுமதி வழங்கிய கரைச்சி பிரதேச சபைக்கு எதிராகவும், ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, கரடிப்போக்கு பகுதியில் இன்று இந்த கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

கரடிப்போக்கு சந்தியில் கரைச்சி பிரதேச சபைக்கு சொந்தமான காணியில் முறையற்ற விதத்தில் கட்டடம் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியே, இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

பன்னங்கண்டி பகுதியை சேர்ந்த சுமார் 18 பேர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணிநேரம் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், குறித்த பகுதியில் கட்டடம் அமைக்க கரைச்சி பிரதேச சபையினர் முறையற்ற விதத்தில் அனுமதி வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன், வசதி படைத்தவர்களிற்கு வர்த்தக நடவடிக்கைக்காக இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், தேவை உள்ளவர்களிற்கு வழங்கப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தினர்.