ரிஷாத்திற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிற்கு எதிராக இன்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அலுத் கமகே மற்றும் டி.வி.சானக உள்ளிட்ட எதிர்கட்சியினர் இந்த முறைப்பாட்டினை செய்துள்ளனர்.

ரிஷாத் பதியுதீன் சதொச விற்பனை நிலையத்தின் மூலம் பல்வேறு ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தே குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாடளிப்பதற்கு முன்னர் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் தெளிவுபடுத்திய பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக ,

ரிஷாத் பதியுதீனுக்கு சொந்தமாக நாடளாவிய ரீதியில் 42 நிறுவனங்கள் காணப்படுகின்றதாகவும் , அவற்றில் ஒன்றான சதொச விற்பனை நிலையத்தின் மூலம் பல்வேறு ஊழல்கள் இடம்பெறுகின்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு ரிஷாத்துக்கு சொந்தமான தனியார் நிறுவனமொன்றில் தொழில் செய்யும் 52 ஊழியர்களுக்கு சதொச நிறுவனத்தின் ஊடாகவே சம்பளம் வழங்கப்படுகின்றதாகவும், அது மாத்திரமின்றி ரிஷாத்துக்கு சொந்தமான தனியார் தொலைக்காட்சியொன்றின் ஊழியர்களுக்கு அரச நிதியிலிருந்தே சம்பளம் வழங்கப்படுகிறதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவற்றுக்கான ஆதாரங்கள் அனைத்தும் தம்மிடம் உள்ளதாகவும், குறித்த ஆதரங்களுடனேயே இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ரிக்ஷாத்திற்கு எதிராக முறைப்பாடளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ரிஷாத் பதியுதீன் மாத்திரல்லாது , தற்போது அமைச்சரவையில் அங்கத்துவம் வகிக்கின்ற 30 அமைச்சர்களில் 20 பேர் பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் தொடர்பிலும் வெகு விரைவில் தகவல்களை வெளிப்படுத்த உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்துள்ளார்.