வடக்கிற்கு செல்லவுள்ளார் பிரதமர் ரணில்

வடக்கிற்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொள்ளும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.

அந்த வகையில் அவர் நாளை வவுனியா பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட புதிய கட்டடம் ஒன்றை திறந்து வைக்கவுள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் இரண்டாவது சுகாதாரதுறை மேம்படுத்தல் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உருவாக்கபட்ட விபத்து மற்றும் அவசரசிகிச்சை பிரிவை மக்கள் பயன்பாட்டிற்கு கையளிப்பதற்கும், நெதர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கபடவுள்ள இலகு கடன் உதவியில் அமைக்கபடவுள்ள இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் பிரதமரின் பங்கேற்புடன் நாளை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெறவுள்ளது.

பிரதமரது இந்த வருகையை முன்னிட்டு வவுனியா வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள வர்தக நிலையங்கள், அதன் உரிமையாளர், பணிபுரிபவர்களது தகவல்கள் பெறும் நடவடிக்கை நேற்று முன்தினம் சிவில் உடை தரித்த பொலிசாரால் மேற்கொள்ளபட்டிருந்தது.

இந்த நிகழ்வில் சுகாதாரஅமைச்சர் ராஜித சேனாரத்தின, நெதர்லாந்து துணை தூதுவர் ஈவா வான்வோசம், வடமாகாண ஆளுனர் சுரேன் இராகவன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.