ரணில் மீது லசந்தவின் மகள் பகிரங்க குற்றச்சாட்டு

கடந்த நான்கு வருடங்களாக கோத்தபாய ராஜபக்சவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாதுகாத்து வந்துள்ளதாக லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஐக்கியதேசிய கட்சிக்கும் அனுப்பியுள்ள பகிரங்க கடிதத்தில் அவர் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

அதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது அரசியல் உரையில் தனது தந்தை லசந்த விக்கிரமதுங்க குறித்து சுட்டிக்காட்டியிருந்ததாகவும், ஜனாதிபதியானதும் அச்சமற்ற சூழலை ஏற்படுத்துவேன் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளமைக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை கூறியிருந்ததாகவும் பிரதமரிற்கு அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பிரதமரின் உரையில் எனது தந்தையினது கொலைக்காவும் ஏனைய ஈவிரக்கமற்ற கொலைகளிற்காகவும் கோத்தபாய ராஜபக்ச மன்னிப்பு கோருவாரா என ரணில் கேட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச எனது தந்தையின் கொலைக்கு ஒருபோதும் மன்னிப்பு கோரமாட்டார் என்றும், கடந்த பத்துவருடங்களாக தொலைக்காட்சி பேட்டிகளில் எனது தந்தையின் கொலை குறித்து தான் மகிழ்ச்சியடைவதை கோத்தபாய ராஜபக்ச பகிரங்கமாகவே தெரிவித்துள்ளதாகவும் அகிம்க்ஷா சுட்டிக்காட்டியுள்ளார்.

எனது தந்தையின் கொலைக்காக கோத்தபாய ராஜபக்ச மன்னிப்பு கோரப்போவதில்லை என தீர்மானித்துவிட்டதாகவும் அகிம்சா தெரிவித்துள்ளார்.

ஆனால் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க இன்று தான் கொலையாளி என வர்ணிக்கும் அந்த நபரை கடந்த நான்கு வருடங்களாக பாதுகாத்து நன்கு கவனித்து வந்துள்ளதாக , குறிப்பிட்டுள்ள அகிம்சா விக்கிரமதுங்க அதற்காக ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு கோருவாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது தந்தை இறந்த நாள் முதல் அவரது பெயரை நீங்கள் வாக்கு பெறுவதற்காக பயன்படுத்தியுள்ளீர்கள் என்றும், தெரிவித்துள்ள அகிம்சா தந்தையின் படுகொலை குறித்து விசாரணைகள் இடம்பெறும் என பிரச்சாரம் செய்தே நீங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் ஐக்கியதேசிய கட்சியையும் ஆட்சியில் அமர்த்தினீர்கள் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும் ஆட்சிக்கு வந்ததும் உங்கள் முன்னுரிமைகள் மாறிவிட்டதாகவும், 2015 இல் அலரிமாளிகையில் எனது தந்தையின் படுகொலைக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தவேண்டும் என கோருவதற்காக தான் சந்தித்தவேளை பிரதமர் வேறு முன்னுரிமைக்குரிய விடயங்கள் உள்ளன,நீதி என்பது லசந்தவுடன் மாத்திரம் தொடர்புடையது இல்லை என தெரிவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டிட்யுள்ளார்.

பிரதமர் கோத்தாவை படுகொலையாளி என கூறும் அதேவேளை பிரதமர் குடும்பத்தவர்களும் , ஐ.தே.கட்சி சிரேஸ்ட அதிகாரிகளும் கோத்தபாய ராஜபக்சவுடன் நட்பை தொடர்ந்தும் பேணி வருகின்றதாகவும் அகிம்க்ஷா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக அல்லது பிரதமராக வந்தாலும் இதுவரை காலமும் கோத்தபாய ராஜபக்சவிற்கு சட்டத்தின் பிடியிலிருந்து விலக்களிக்கப்பட்ட நிலை தடையின்றி தொடரும் என தான் நிச்சயமாக நம்புவதாகவும் அகிம்சா விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனது தந்தையின் மரணம் குறித்து பெருமிதத்துடன் தம்பட்டம் அடித்த நபர் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி வேட்பாளராகியுள்ள நிலையில் துணிச்சலான நேர்மையான அரசியல்வாதியொருவரே அவரை எதிர்க்கவேண்டும் என தான் எதிர்பார்ப்பதாகவும் என அகிம்சா விக்கிரமதுங்க, பிரதமர் ரணிலிற்கும், ஐக்கியதேசிய கட்சிக்கும் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.