சம்மந்தன் தீர்மானத்தால் ஆடிப்போன அமெரிக்க இராஜங்க செயலாளர்!

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு கேடு நேராதவாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் இருக்கும் எதிர்பார்க்க கூடாது என கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் தீர்மானித்துள்ளார்.

கூட்டமைப்பின் இந்த தீர்மானத்தினால் அமெரிக்கா அதிர்ச்சியடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் களுவாஞ்சிக்குடியில் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்த மக்கள் தெளிவூட்டல் நிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மத்திய மற்றும் தெற்காசியாவிற்கான உதவி இராஜங்க செயலாளர் எலிஸ் வேல்ஸ் அம்மையாரை, கூட்டமைப்பின் தலைவரும் , தானும் சந்தித்து கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலின்போது , 2011 ஆண்டு அமெரிக்காவிற்கு நாங்கள் வருகை தந்தபோது பல்வேறு மட்டத்தினரையும் சந்தித்து கலந்துரையாடி தீர்க்கமான முடிவு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 3 தீர்மானங்களை அமெரிக்க கொண்டு வந்திருந்தது. அவற்றை இலங்கை அரசாங்கமும் ஏற்றுக் கொண்டிருந்தது.

ஆனால், அவை தொடர்பாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற போதிலும் எதுவும் பூரணப்படுத்தப்படவில்லை என கூட்டமைப்பின் தலைவரால் சுட்டிக்காட்டப்பட்டதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.

குறிப்பாக மீளநிகழாமையை உறுதிப்படுத்துவதற்கான புதிய அரசியலமைப்பு உருவாக்கும் முயற்சிகள் பூரணப்படுத்தப்படவில்லை என்றும், இவற்றையெல்லாம் எவ்வாறு முன்னகர்த்துவது என்பது தொடர்பில் அமெரிக்க பிரதிநிதியிடம் கேட்டபோது, அதற்கு பதிலளித்த அமெரிக்க உதவி இராஜங்க செயலாளர், எதிர்வரும் தேர்தலில் எவ்வாறான கேடும் நேராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனை மறுத்த சம்மந்தன் , கேடு நிகழக்கூடாது என்பதற்காக செயற்பட்டு நாங்கள் களைத்துப் போய் விட்டோம் என்பதையும் எதிர்காலத்தில் அதற்காக எமது மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதை அவர்களிடம் உறுதியாக தெரிவித்துவிட்டு எழுந்து சென்றதாகவும் சுமந்திரன் கூறியுள்ளார்.

கூட்டமைப்பின் தலைவரின் இந்த தீர்மானத்தினால் உதவி இராஜங்க செயலாளர் எலிஸ் வேல்ஸ் அம்மையார் அதிர்ச்சியடைந்து விட்டாதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் இதன்போது மேலும் தெரிவித்துள்ளமை குறிபிடத்தக்கது.