சுமந்திரன் கூறுவது பொய்! எல்லாம் அம்போவாம்

எமது முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை விட அமைச்சு பதவி பெரிதான ஒரு விடயம் இல்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த 2015 ஆம் ஆண்டு மக்கள் மைத்திரி அலையில் அள்ளுண்டு போனதால் அரசியல் தலைமைகளுக்கு இந்த அரசை அமைக்க எந்தவித ஒப்பந்தங்களும் இல்லாமல் ஆதரவு வழங்கும் நிலை ஏற்பட்டதாகவும், அது போன்று இம்முறை செய்ய முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

நேற்று மாலை பொத்துவில் பிரதேச கட்சி முக்கியஸ்தர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிகளை கொண்டு திட்டமிடப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை செய்து முடிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கடந்த ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் சிங்கள, தமிழ் மக்களின் மனோநிலை வேறுவிதமாக இருக்கிறதாகவும், இக்கால கட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அவசரப்பட்டு எந்த தீர்மானங்களும் எடுக்க முடியாது என்றும், எனவே கடந்த காலங்களை விட இந்த தேர்தல் கடினமாக இருக்கும் என்பதால் அலசி ஆராய்ந்து பார்த்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு வருவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர்களை அடையாளப்படுத்த இப்போதுதான் ஆரம்பித்துள்ள நிலையில், நாம் தொடர்ந்தும் அச்சத்துடன் வாழ முடியாது என்றும், அவர் கூறியுள்ளார்.

அதோடு அண்மையில் தெஹிவளை பள்ளிவாசலில் நடைபெற்ற மாநாட்டில் தங்களுடைய திருமண சட்டம், காதி நீதிமன்ற விவகாரம், நிஹாப் பிரச்சினை அடங்களாக பிரதேச ரீதியாக பல பிரச்சினைகள் இருப்பதாகவும், அவற்றை தீர்த்து வைக்க வேண்டும் என்றும் அதை செய்யாமல் அமைச்சர் பதவியை பெற்று கொள்ள முடியாது என தாம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்களின் கூட்டு இராஜினாமா மூலம் அரசாங்கத்திற்கு பரவலாக சர்வதேச அழுத்தங்கள் வரத்தொடங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தங்களின் ஒற்றுமையான பயணத்தின் மூலம் நாட்டில் வாழும் முஸ்லிங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் முஸ்லிங்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் அதிகமான பிரச்சினைகள் தேங்கி உள்ளநிலையில், தோப்பூர் மக்களுக்கான பிரதேச செயலக உருவாக்கத்தை இலக்காக கொண்டு முன்வைக்கப்பட்ட அமைச்சரை பத்திரத்தை கூட தமிழ் தேசிய கூட்டமைப்பு தலையிட்டு தடுத்ததோடு , ஓட்டமாவடி மற்றும் வாழைசேனையில் தமது மக்களின் காணிப்பிரச்சினையிலும் கூட்டமைப்பு அநீதியாக நடந்து கொள்கிறதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நேற்றையதினம் களுவாஞ்சிகுடியில் நடந்த கூட்டம் ஒன்றில் பொய்யான பல தகவல்களை இனவாதமாக தமிழ் மக்களிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கல்முனை என்பது 100 வருடங்களுக்கு முன்னரே இருந்து முஸ்லிம் அமைச்சர்கள், தலைவர்களால் வடிவமைக்கப்பட்ட நகரம் என்றும், தமிழ் புலிகளின் உதவியுடன் உருவாக்கப்பட்ட உப செயலகத்தை அவர்கள் நினைத்தால் போல தரமுயர்த்த அவர்கள் கொண்டுவரும் திட்டங்கள் ஒருபோதும் வெற்றிபெற இடமளிக்கப்போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

பொய்யான பல தகவல்களை ஊடகங்களிடமும், மக்களிடமும் தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பரப்பி வருகின்றதால் முஸ்லிம் புத்திஜீவிகளும் கூட சில நேரங்களில் குழம்பி போகிறார்கள் எனவும், அவர் தெரிவித்துள்ளார்.

அதோடு கல்முனையில் யாருக்கும் எந்தவித விட்டுக்கொடுப்புக்களோ அல்லது அநியாயங்களோ நாங்கள் செய்யப்போவதில்லை எனவும் , கல்முனை விவகாரம் பற்றிய முன்னெடுப்புக்கள் சம்பந்தமாக தன்னிடம் யார் எப்போது வினவினாலும் பதிலளிக்க தயாராகவே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் மக்களின் அபிலாசைகளை மதிக்காமல் வடக்கையும் கிழக்கையும் இணைத்தவர்கள் மீண்டும் வடக்கையும் கிழக்கையும் இணைக்க தமது கோரிக்கைகளை புதிய வேட்பாளர்களிடம் முன்வைக்க தயாராகி வருகின்ற நிலையில், . முஸ்லிம் தரப்பில் நாங்கள் முன்வைக்கப்போகும் முதல் கோரிக்கை வடக்கையும் கிழக்கையும் ஒருபோதும் இணைக்க கூடாது என்பதே எனவும் அவர் கூறியுள்ளார்.

சிலர் தான் மஹிந்த அணிக்கு தாவப் போவதாக வதந்திகளை பரப்பி விடுவதாகவும், எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு எப்போதும் கட்டுப்பட்டு நடப்பவன் எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.