ரணிலின் வடக்கு விஜயத்தின் நிகழ்ச்சி அட்டவணை இதுதான்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கான மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

அந்தவகையில் இன்று மாலை வவுனியாவிற்கு விஜயம் செய்த பிரதமர், மாலை 3 மணிக்கு வவுனியா பொது வைத்தியசாலையில் சுகாதாரதுறை மேம்படுத்தல் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உலக வங்கி நிதியுதவியில் உருவாக்கபட்ட விபத்து மற்றும் அவசரசிகிச்சை பிரிவை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கையளித்துள்ளார்.

அதன் பின்னர், நெதர்லாந்து அரசாங்கத்தின் இலகு கடன் உதவியில் அமைக்கப்படவுள்ள இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவிற்கான அடிக்கல்லையும் நாட்டியுள்ளார்.

குறித்த நிகழ்வு முடிந்ததும், யாழ்ப்பாணம் வரும் பிரதமர் ஜெட்விங் ஹொட்டலில் அமைச்சர்களுடன் அங்கு தங்கியிருப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் அவரது நாளைய நிகழ்ச்சி நிரலின் தொடக்கமாக காலை 7 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவார் என்றும், அதன் பின்னர் நல்லை ஆதீன சுவாமிகளை சந்தித்து பேசுவதோடு, அங்கு சைவ சமய தலைவர்களுடனான கலந்துரையாடலும் இடம்பெற உள்ளது.

இதன்போது சைவ மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து அதில் விவாதிக்கப்படஉள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்பின்னர் பிரதமரின் நிகழ்ச்சி நிரல் கீழ் வருமாறு அமையவுள்ளது.

காலை 9.45 மணிக்கு மைலிட்டி துறைமுகம் திறக்கப்படும்

10.20 மணிக்கு அங்கு 10 வீடுகளை பொதுமக்களிடம் கையளிப்பார்.

11 மணிக்கு திருநெல்வேலி விவசாய திணைக்கள பயிற்சி நிலையத்தில் நடைபெறும் நிகழ்வில், பொதுமக்களிற்கு விவசாய உபகரணங்கள் வழங்குவார்.

மதியம் 2 மணிக்கு குருநகர் மீன்பிடி துறைமுகத்திற்கான அடிக்கல் நாட்டப்படும்.

3.15 மணிக்கு சாவகச்சேரி வைத்தியசாலையின் இயன் சிகிச்சை பிரிவு திறப்பு

4.15 மணிக்கு யாழ் நாகவிகாரையில் வழிபாடுகளில் ஈடுபடுவார் என்றும், பின்னர் பிரதமரின் விருப்பத்திற்குரிய யாழ் ஐஸ்கிறீம் கடை விஜயமும் இடம்பெறலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் 16ம் திகதி பிரதமர் காலை 9 மணிக்கு இந்தியாவினால் யாழில் அமைக்கப்படும் கலாசார நிலைய கட்டுமான பணிகளை பார்வையிடுவார்.

10 மணிக்கு யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இடம்பெறும்.

12.30 மணிக்கு வடமராட்சி உடுப்பிட்டியில் 10 வீடுகளை பொதுமக்களிடம் கையளிப்பார் என்றும் தெரிவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.