சபாநாயகர் கரு ஜயசூரிய போட்டியிட்டால் கோட்டா தோற்பது உறுதி!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில், சபாநாயகர் கரு ஜயசூரிய போட்டியிட்டால், பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ஷ தோல்வியடைவார் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்தே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வு தொடர்பில் கூறிய பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை அறிவியல் ஆய்வாளரும் அந்தப் பிரிவின் முன்னாள் பேராசிரியருமான சிசிர பின்னவல கோத்தாவுடன் சஜித் போட்டியிட்டால், சஜித்துக்கு மூன்றாவது இடமே கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

நாட்டை எட்டு வலயங்களாக பிரித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கோத்தாவுடன் சமாந்தரமாக பார்த்தால், அதில் ஏழு வலயங்களில் கருவும், நான்கு வலயங்களில் சஜித்தும் முன்னிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வலயங்களாவன,

1.கொழும்பு மாநகர அதிகார பிரதேசம்.

2. ஹோமாகம, பன்னிப்பிட்டிய, மஹரகம, கோட்டை உள்ளிட்ட தொழில் பிரதேசம்

3.கண்டி, காலி, மாத்தறை, குருநாகல் உள்ளிட்ட இடைக்கால நாகரீக அதிகார பிரதேசம்

4.தெற்கு, வடமேல், வடமத்திய மற்றும் கம்பஹா உள்ளிட்ட கிராமிய பௌத்த பிரிவு

5.மொனராகலை, ஹம்பாந்தோட்டை, வடமேல் மாகாணம் உள்ளிட்ட பொருளாதார ரீதியில் பின்னடைந்த வலயம்.

6.வடக்கு, கிழக்கு தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசம்.

7. கிழக்கில் முஸ்லிம்கள் செறிந்துவாழும் பிரதேசம்

8. நாட்டுக்குள் பெரும்பான்மையாக கிறிஸ்தவர்கள் வாழும் பிரதேசம், கரையோர பிரதேசம்

என்றடிப்படையில் பிரித்தே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிங்கள் ஊடகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.