கோட்டாவின் மேன்முறையீட்டு மனுவை நிராகரித்த நீதிபதிகள்

பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள விதம் தவறானது எனகூறி அதனை நிராகரிக்குமாறு கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கோட்டாவின் இந்த மேன்முறையீடு சிசிர த ஆப்ரூ, பிரியன்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.ரீ.பி தெஹிதெனிய ஆகிய நீதிபதிகள் முன்னலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது உத்தரவை பிறப்பித்த நீதிபதி சிசிர த ஆப்ரூ, குறித்த மனு ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழுவின் பெரும்பான்மை இணக்கத்துடன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் நிராகரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

குறித்த மனுவை விசாரணைக்கு எடுப்பதற்கு போதுமான சட்டக் காரணிகள் இல்லை எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை3 கோடியே 39 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.