தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றிபெற இரண்டு வழிகள்!

இலங்கையில் எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கே வெற்றி வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றது.

இந்நிலையில் பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ச வெற்றிபெறவேண்டுமெனில் அவருக்கு இரண்டு வழிகள் உண்டு என அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.

அந்தவகையில் முதலாவது வடக்கு கிழக்கை சேர்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கோத்தபாய ராஜபக்சவுக்கு நேரடியாக வாக்களிக்கவேண்டும். அவ்வாறு வாக்களித்தால் அறுதிப்பெரும்பான்மை பெற்று அவர் வெற்றி பெறுவார் என்பது திண்ணம். ஆனால் இது நடக்குமா என்பது கேள்விதான்.

இரண்டாவதாக வடக்கு கிழக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கோத்தபாய ராஜபக்சவுக்கு வாக்களிக்காது போயினும் அவருக்கு போட்டியாக உள்ள சஜித் பிரேமதாசவுக்கு வடக்கு கிழக்கு மக்கள் வாக்களிக்க கூடாது. இவ்வாறு செய்தால் தனிச்சிங்கள வாக்குகள் மற்றும் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதியில் வசிக்கும் சிறுபான்மை சமூகத்தின் சொற்ப வாக்குகள் என்பவற்றை பெற்று குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தா வெற்றிபெறுவார் எனவும் கூறப்படுகின்றது.

எனவே இந்த இரண்டு வழிகளையும் முழுமையாக பயன்படுத்தி கோத்தபாய அணியினர் கோத்தபாயவை வெற்றி பெற வைக்க முயற்சிப்பதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாகவே "மொட்டுக்கு" வாக்களியுங்கள் என்று தம் நேரடி முகவர்களான டக்லஸ்/கருணா/அங்கயன்/மஸ்தான் போன்றவர்கள் ஊடாக வடக்கு கிழக்கில் பிரச்சாரம் செய்யும் ராஜபக்க்ஷர்கள் சஜித் பிரேமதாசவுக்கு தமிழ் மக்கள் வாக்களித்துவிடக்கூடாது என்பதற்காக தம் மறைமுக முகவர்கள் ஊடாக தமிழ் மக்கள் தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்கின்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் வடக்கு கிழக்கு மக்கள் தேர்தலை பகிஸ்கரித்தால் தெற்கின் வாக்குகளை மாத்திரம் கொண்டு கோத்தா இலகுவாக 50%+1 வாக்கு பெற்று வெற்றி பெற்றுவிடலாமென அவரின் குறுக்கு மூளை நினைக்கின்றது.

அவரின் இந்த வெற்றியை உறுதிப்படுத்தவே யாழ் நகரில் அவரின் மறைமுக முகவர்கள் தேர்தலை பகிஸ்கரியுங்கள் எனக்கோரி நேற்றையதினம் துண்டுப்பிரசுரம் விநியோகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.