கூட்டமைப்பிற்கும் சஜித்திற்கும் இடையில் சந்திப்பு!

தமிழ்த் தேசியகூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாசவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு மட்டக்களப்புக் கல்லடியிலுள்ள Green Garden இல் இன்று பிற்பகல் நடைபெற்றது.

இதன் போது முக்கியமான சில விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன், எழுத்து மூலமான கோரிக்கையும் கையளிக்கப்பட்டுள்ளது.

  • தேசிய பிரச்சனைக்குரிய நிரந்தரமான தீர்வு

  • கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தினை முழுமையாக்குதல்

  • தொழிற்சாலை அமைத்தல்

  • பாலங்களை அமைத்தல்

  • வேலையில்லா பட்டதாரிகளுக்கு விரைவாகத் தொழில்வாய்ப்புகளை

வழங்குதல் இதன்போது உள்வாரிப் பட்டதாரி, வெளிவாரிப் பட்டதாரி,

வெளிநாட்டுப் பட்டதாரி ,எச்.என்.டி.எ பட்டதாரி என்ற பேதங்கள் பார்க்காமல்

தொழில் வழங்குதல்.

  • கிரான்புல் அணைக்கட்டினை நிருமாணித்தல் .
  • அரச ஊடகத்துறையில் தமிழர்களுக்கான வாய்ப்புகள் பதவியுயர்வுகளின் போது

பாரபட்சம் காட்டாமையை உறுதிப்படுத்தல்

  • வீதிகளை புனரமைத்தல்
  • விவசாயத்துறை, நீர்ப்பாசனத்துறை என்பவற்றை மேம்படுத்தல்
  • மேய்ச்சல் தரைகளைப் பிரகடனப்படுத்தல்போன்ற விடயங்கள் அதில் கோரப்பட்டிருந்தன.

இந்நிலையில் குறித்த விடயங்களைச் சாதகமாக கையாளவுள்ளதாக சஜித் பிறேமதாச தெரிவித்ததோடு தனது வெற்றியின் பின்னர் ஆக்கபூர்வமான பல நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பாரபட்சம் பக்கச்சார்பு இல்லாமல் சகல மக்களுக்கும் சம வாய்ப்புகள், சமத்துவங்களை வழங்க வேண்டும் என்பதையும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் இதன்போது ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜி.ஸ்ரீநேசன், சீ.யோகேஸ்வரன் ஆகியோரும் தமிழரசுக்கட்சிப் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், மாநகர முதல்வர் தி.சரவணபவான், ரெலோ அமைப்பின் தலைவர் பிரசன்னா இந்திரகுமார் மற்றும் தமிழரசுக்கட்சி வாலிபர் முன்னணித் தலைவர் லோ.தீபாகரன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.