கோத்தாபய ராஜபக்ஷவிற்கு வாழ்த்து கூறியுள்ள பன்னாட்டு தலைவர்கள்

நாட்டின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷவிற்கு பன்னாட்டு தலைவர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், மாலைதீவு ஜனாதிபதி இப்ரஹீம் மொஹமட் சோலி, பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் தாரிக் அஹமட் ஆகியோரும் அமெரிக்கத் தூதுவர் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகரும் தமது வாழ்த்துக்களைத் டிவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்த கோத்தாபய ராஜபக்ஷவிற்கு வாழ்த்துக்கள். இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதரத்துவ தொடர்பை மேலும் வலுப்படுத்துவதற்கும், அமைதிக்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், இருநாடுகளினதும் சுபீட்சத்திற்குமாக கோத்தாபய ராஜபக்ஷவுடனும், இலங்கையுடனும் நெருக்கமாக செயற்படுவதற்கு பாக்கிஸ்தான் எதிர்பார்த்துள்ளதாக பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதேபோல மாலைதீவு ஜனாதிபதி இப்ரஹீம் மொஹமட் சோலி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் கோத்தபாயவிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளதோடு ஏற்கனவே நெருக்கமானதாக உள்ள இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கு கோத்தாபய ராஜபக்ஷவின் கீழான புதிய நிர்வாகத்துடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கு பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் தாரிக் அஹமட் ,ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு வாழ்த்துக்கள். பொதுநலவாய பங்காளிகள் என்ற அடிப்படையில் தொடர்ந்தும் பிரிட்டன் இலங்கையுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளது' என அவர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதேவேளை வெளிவிவகார அமைச்சரின் பதிவை சுட்டிக்காட்டி, பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் ,

தேர்தலில் வெற்றியீட்டியமைக்கு கோத்தாபய ராஜபக்ஷவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் அதேவேளை, இதற்கு முன்னர் இடம்பெற்ற தேர்தல்களை விடவும் இம்முறை அமைதியான தேர்தல் நடந்தேறியுள்ளமைக்கு இலங்கை மக்களுக்கும் வாழ்த்துக் கூறுகின்றேன்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எதிர்வரும் காலத்தில் சுயாதீனத்தன்மையும் உறுதிப்பாடும் உடைய இலங்கையில் சிறந்த ஆட்சி, பொருளாதார அபிவிருத்தி, மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்தல் ஆகியவை தொடர்பில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படத் தயாராக இருக்கின்றோம் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறமையும் குறிப்பிடத்தக்கது.