நாளை விசேடமாகக் கூடும் கோப்குழு

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான கோப் குழு, அதன் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துந்நெத்தி தலைமையில் நாளை விசேடமாகக் கூடவுள்ளது.

இதன்போது மத்திய வங்கி திறைசேரிமுறி தொடர்பாக மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்பட்ட தடயவில் கணக்காய்வின் இறுதி அறிக்கை மற்றும் எதிர்காலத்தில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து கோப் குழு கலந்துரையாடவுள்ளது.

இந்த நிலையில் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு சகல கோப் குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

மத்திய வங்கி திறைசேரிமுறி செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு திறைசேரிமுறி குறித்து தடயவியல் கணக்காய்வொன்றை மேற்கொள்ளுமாறும் மத்திய வங்கிக்கு பணிப்புரை விடுத்திருந்தது.

இந்தப் பணிப்புரை தொடர்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, கோப் குழுவுக்குத் தெரியப்படுத்தியிருந்தது.

அத்துடன் கடந்த மார்ச் 22ஆம் திகதி கூடியிருந்த கோப் குழு, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் மத்திய வங்கிக்கு பரிந்துரைக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் வலியுறுத்தியிருந்தது.

இந்நிலையில் மத்திய வங்கியின் திறைசேரிமுறி விவகாரம் தொடர்பாக 7ஆவது நாடாளுமன்றத்தின் கோப் குழு தயாரித்திருந்த அறிக்கை, நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டமையால் சபையில் சமர்ப்பிக்க முடியாமல் போயிருந்தது.

இதனையடுத்து இது 8ஆவது நாடாளுமன்றத்தில் மீண்டும் ஆராயப்பட்ட பின்னர் குழுவினால் முடிவு எடுக்கப்படவுள்ளமைகுறிப்பிடத்தக்கது.