அரசாங்கத்திற்கும் தமிழர்களுக்குக்குமான இடைவெளிக்கு தமிழ் ஊடகங்களே காரணம் – மஹிந்த காட்டம்!

அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான இடைவெளிக்கு தமிழ் ஊடகங்களே காரணம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ் ஊடகப் பிரதானிகளுக்கும் பிரமருக்கும் உடனான சந்திப்பு இன்று காலை அலரிமாளிகையில் இடம்பெற்றது.

இதன்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

அத்துடன் தமிழ் மக்களுக்கு தேவையான அரசியல் தீர்வினை இந்தியாவே பெற்றுக் கொடுக்க வேண்டும் என சில தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், தமிழ் மக்களுக்கான தீர்வினை ஒருபோதும் இந்தியாவினால் வழங்க முடியாது என்றும் இலங்கை அரசாங்கத்தினால் மாத்திரமே அவர்களுக்கான தீர்வை வழங்க முடியும் எனவும் கூறியுள்ளார்.

சில தமிழ் ஊடகங்கள் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களையே தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றமையே தமிழ் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான இடைவெளி அதிகரிக்க காரணமாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இனிவரும் காலங்களில் இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பதனை தமிழ் ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் எனகுறிப்பிட்ட பிரதமர், வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் தமிழ் மக்களுக்கு தேவையானவற்றினை அரசாங்கம் தொடர்ந்தும் செய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல 13 பிளஸ் குறித்த எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனவும், தமிழ் மக்களினால் கொண்டுவரப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று வடக்கில் உள்ள தமிழ் மக்கள் தற்போது பாரிய பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றதாக தெரிவித்த மகிந்த,

குறிப்பாக இந்திய மீனவர்களின் இழுவைபடகுகள் காரணமாக வடக்கில் உள்ள மீனவர்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முழுப்பொறுப்பும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஒப்படைத்துள்ளதாகவும், அத்துடன் தனது இந்திய விஜயத்தின்போதும் நான் இந்திய – இலங்கை மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 34 அரச புலனாய்வாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மகிந்த, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்கள், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள கால எல்லை என்பன குறித்து அறிக்கையை கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சில தமிழ் அரசியல் கைதிகள் பாரதூரமான குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அறிக்கை கிடைத்ததன் பின்னரே அவர்கள் குறித்து தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபாயினை ஐந்து வருடங்களுக்குள் பெற்றுக்கொடுப்பதாகவே தாம் உறுதிமொழி வழங்கி இருந்த நிலையில், அதை உடனடியாக நிறைவேற்றுமாறு கோருவது தவறானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் எமது தற்போதைய அரசாங்கத்தில் ஏன் முஸ்லிம் அமைச்சர்கள் இல்லை என கேட்கின்றீர்கள் எனக்குறிப்பிட்ட பிரதமர், ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை என்றும்,அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அமைச்சரவையில் நியமிக்குமாறு எந்தவொரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பரிந்துரை செய்திருக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபாவும் தனக்கு அமைச்சுப் பதவி வேண்டாம் என கூறிவிட்டதாகவும், நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் எமது தரப்பில் முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் வெற்றி பெற்றால் அவருக்கு அமைச்சுப் பதவியினை வழங்குவது குறித்து தீர்மானிப்போம் எனவும் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.