அதிவிஷேட வர்த்தமானி வெளியானது

ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 196 உறுப்பினர்களது பெயர்களை உள்ளடக்கிய அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ஆணைக்குழுவின் உறுப்பினர்களான பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல், என்.ஜே.அபேசேகர ஆகியோரது கையெழுத்துடன் இது வெளியிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 62 ஆவது பிரிவில் 1981 இன் முதலாம் இலக்க பாராளுமன்ற உறுப்புரைக்கமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய 22 தேர்தல் மாவட்டங்களிலும் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன் நிறைவடைந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பொது ஜன பெரமுன கட்சியிலிருந்து 128 உறுப்பினர்களது பெயர்களும், ஐக்கிய மக்கள் சக்தியில் 47 உறுப்பினர்களது பெயர்களும், இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து 9 உறுப்பினர்களது பெயர்களும், தேசிய மக்கள் சக்தி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி என்பவை சார்பில் தலா இரு உறுப்பினர்களது பெயர்களும் , அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, முஸ்லிம் தேசிய கூட்டணி , தமிழ் மக்கள் தேசிய கூட்டணி , அகில இலங்கை மக்கள் காங்ரஸ் , தேசிய காங்கிரஸ் , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் ஆகிய கட்சிகளில் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு உறுப்பினர்களது பெயர்களும் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது.