சீனப்பிரதமரின் வாழ்த்துச்செய்தி மஹிந்தவிடம் கையளிப்பு

இலங்கை ஜனநாயக சோசலிசக்குடியரசின் 28 ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்கும் நிகழ்வு நேற்று களனி ரஜமஹா விகாரையில் நடைபெற்றது.

இதன்போது பொதுத்தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள சீனப்பிரதமர் லீ கெகுவாங்கின் செய்தி சீனத்தூதரக விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

2020 ஆகஸ்ட் 5 பொதுத்தேர்தலில் வரலாற்று வெற்றியைப்பெற்று பிரதமராகப் பதவியேற்றுக்கொண்ட மஹிந்த ராஜபக்ஷவிற்கு சீனப்பிரதமர் தனது வாழ்த்தினை அனுப்பிவைத்திருப்பதாக சீனத்தூதரகம் தெரிவித்திருக்கிறது.

அதேவேளை எதிர்வரும் காலங்களில் சீன - இலங்கை நாடுகளுக்கு இடையிலும் அவற்றின் மக்களுக்கு இடையிலும் பரஸ்பரம் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்துவதை முன்நிறுத்தி செயற்படத் தயாராக இருப்பதாகவும் அந்த செய்தியில் கூறியிருப்பதாகத் தூதரகம் குறிப்பிட்டிருக்கிறது.

இலங்கையிலுள்ள சீனத்தூதரக விவகாரங்களுக்குப் பொறுப்பான ஹு வேயினால் குறித்த வாழ்த்துச்செய்தி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.