மாவைக்கு தூதுவிடும் சுமந்திரன்

இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவை சரி செய்ய, இரண்டு அணிகளையும் சமரசம் செய்ய பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் , பருத்தித்துறையில் நடந்த கூட்டத்தில் எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்திருந்தார்.

மாவை சேனாதிராசாவிற்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்காமல் இரகசிய நகர்வுகளை மேற்கொண்டதுடன், சி.சிறிதரனை தமிழ் அரசு கட்சி தலைவராக்கும் முயற்சியையும் எம்.ஏ.சுமந்திரன் மேற்கொண்டார்.

கட்சிக்குள் சதி நடந்த விவகாரத்தால் தமிழ் அரசு கட்சியின் அனேகமானவர்கள் மாவை சேனாதிராசாவை ஆதரிப்பதுடன், சம்பந்தன் மற்றும் சுமந்திரன் இல்லாத தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக , க.வி.விக்னேஸ்வரன் தரப்புடனும் நேற்று இடம்பெற்ற பேச்சு வெற்றிகரமாக அமைந்திருந்ததாக கூறப்படுகின்றது.

இந்தநிலையில், இரண்டு தரப்பையும் ஒன்றிணைக்க பல தரப்பு முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதன் ஒரு அங்கமாக யாழிலுள்ள வைத்தியர்கள் குழுவொன்று தீவிர சமரச முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்படி, முதலில் சுமந்திரனுடன் அந்த வைத்தியர் குழு சந்தித்து பேசிய பின்னர், ஓரிரு தினங்களின் முன்னர் அவர் மாவை சேனாதிராசாவை சந்தித்து பேசினர்.

இதன்போது, சுமந்திரன் தரப்பில் கூறப்பட்ட விடயங்களை அவர்கள் மாவை சேனாதிராசாவிடம் தெரிவித்தனர்.

தனக்கு எதிராக கட்சிக்குள் சிலர் செயற்பட்டார்கள், அவர்கள் தொடர்பில் தலைவரிடம் முறையிட்ட போதும், தலைவர் அது பற்றி நடவடிக்கையெடுக்கவில்லையென்பதே சுமந்திரனின் பிரதான குற்றச்சாட்டு என்பதை வைத்தியர்கள் குழு மாவையிடம் இதன்போது தெரிவித்தது.

இந்நிலையில் வைத்தியர்களின் கருத்திற்கு பதிலளித்த மாவை சேனாதிராசா- “கடந்த 10 வருடத்தில் சுமந்திரன் தொடர்பாக கட்சிக்குள்ளிருந்து எனக்கு பல முறைப்பாடுகள் வந்தன. அந்த முறைப்பாடுகளிற்கெல்லாம் நான் சுமந்திரன் மீது நடவடிக்கையெடுத்தேனா? இல்லையே. இன்னொருவர் மீது ஒரு முறைப்பாட்டை வைத்து விட்டு, அது பற்றி நான் உடனடியாக நடவடிக்கையெடுக்கவில்லையென அவர் கூறமுடியாது என்றும், நான் கட்சி தலைவர், சுமந்திரன் கட்சிக்கு முக்கியம். அதேபோல, சுமந்திரன் குற்றச்சாட்டு வைத்தவர்களும் முக்கியம். முன்னர் சுமந்திரன் மீது குற்றச்சாட்டு வைத்தவர்களும் முக்கியம்“ என காரசாரமாக கூறியுள்ளார்.

இரு தரப்பையும் இணக்கப்பாட்டிற்கு கொண்டு வர என்ன செய்யலாமென வைத்தியர் குழு சில யோசனைகளை முன்வைத்தபோது அதற்கு மாவை சேனாதிராசா ஒரேயொரு நிபந்தனை விதித்தார்.

அதாவது “இந்த விவகாரத்தை அவர்தான் ஆரம்பித்தார். அவர்தான் பகிரங்கமாக்கினார். அதேவழியில் அவர்தான் சரி செய்ய வேண்டும்“ என மாவை கூறியுள்ளார்.

இதனையடுத்து சுமந்திரன் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டுமென எதிர்பார்க்கிறீர்களா என வைத்தியர்கள் தரப்பில் கேட்கப்பட்ட போது, அப்படி பொருள் கொள்ளத்தக்கவிதமான முக அசைவை மாவை காண்பித்ததாக, சந்திப்பில் கலந்து கொண்ட வைத்தியர் ஒருவர் கூறியுள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.

இதையடுத்து, மாவை சேனாதிராசாவுடன் பேசிய விடயங்களை வைத்தியர் குழு, எம்.எ.சுமந்திரனிற்கு தெரியப்படுத்தியதையடுத்தே, நேற்று பருத்தித்துறையில் நடந்த கூட்டத்தில் சுமந்திரன் முன்னர் பேசியவற்றை மறுத்து, மாவை மனக்கிலேசமடைந்திருந்தால் மன்னிப்பு கோருவதாக தெரிவித்திருந்தார்.

எனினும், இந்த மன்னிப்பு கோரலால் மாவை தரப்பு திருப்பியடையவில்லையெனவும் கூறப்படுகின்றது.அத்துடன் தலைமை மாற்ற சதி, தேசியப்பட்டியல் இரகசிய நகர்வுகளை சரி செய்யும் விதமான வெளிப்படையான மன்னிப்பு கோரலை மாவை தரப்பு எதிர்பாரக்கிறது.

இதன் காரணமாக , விரைவில் சுமந்திரன் ஒரு பகிரங்க அறிவிப்பை விடுக்கலாமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு வெளியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட இரண்டு தமிழ் அரசு கட்சி பிரமுகர்களும் சமரச முயற்சி ஒன்றில் ஈடுபட்டு நேற்று மாவை சேனாதிராசாவை சந்தித்து பேசியதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.