அலரிமாளிகை முடக்கம்; பசில்ராஜபக்க்ஷ விசனம்

அலரிமாளிகை முடக்கப்பட்டுள்ளதனால் தான் கூட அங்கு சென்று பணியாற்ற முடியாது என பசில் ராஜபக்ச சண்டே டைம்சிற்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன் அலரிமாளிகை முடக்கப்படவில்லை என பிரதமரின் ஊடக செயலாளார் தெரிவித்துள்ளமை குறித்தும் அவர் கடும் சினத்தையும் வெளியிட்டுள்ளார்.

பிரதமரின் ஊடக செயலாளர் சொன்னதும் முற்றிலும் பொய் எனவும் அலரிமாளிகை முற்றாக முடக்கப்பட்டுள்ளதனால், என்னால் அங்குள்ள அலுவலகங்களை பயன்படுத்த முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையை அறிய விரும்பினால் நீங்கள் யாரையாவது அனுப்பிபார்க்கலாம்,அந்த பகுதி முற்றாக மூடப்பட்டுள்ளது,பணியாளர்களை வீட்டிலிருந்து பணிபுரியுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் பசில் ராஜபக்ச தெரிவித்ததாகசண்டே டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

பிரதமரின் ஊடக செயலாளருக்கு தான் என்ன செய்கின்றேன் என்பது தெரியாது உண்மைக்கு மாறான விடயங்களை தெரிவிப்பதன் மூலம் பிரதமரின் பெயருக்கு களங்கத்தையும் அவருக்கு தர்மசங்கடமான நிலையையும் ஏற்படுத்துகின்றதாகவும் பசில் ராஜபக்ச விசனம் வெளியிட்டுள்ளார்.

மேலும் பிரதமர் எதனையும் மறைக்கவிரும்புபவரில்லை அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெளிப்படையானவர் முகத்துக்கு நேரே பேசுபவர் எனவும் கூறிய பசில், பிரதமர் மகிந்த ராஜபக்ச கூட முடக்கலின் பின்னர் அலரிமாளிகைக்கு செல்லவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.