கடும் அதிருப்பதியில் மஹிந்த!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களை அடுத்து அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தீர்மானங்கள் தொடர்பிலும் திருப்தியடைய முடியாதுள்ளது.

எனினும் அரசாங்கம் மேற்கொள்ளும் சரியான தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,

நாட்டில் தற்போது காணப்படும் சூழ்நிலை தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளும் உரிமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சரவைக்கும் மாத்திரமே காணப்படுகின்றன.

எதிர்க்கட்சித் தலைவராகிய நான் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதில்லை என்பதுடன் என்னால் எதிர்க்கட்சியின் நடவடிக்கைகளை மாத்திரமே நிறைவேற்ற முடியும்.

நாட்டில் தேசிய ரீதியில் முக்கியத்துவமான விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் பிரேரணைகளை முன்வைத்தல், கருத்துக்களைத் தெரிவித்தல் மற்றும் அதற்கு வெளியே பொதுமக்களை விழிப்பூட்டல் உள்ளிட்ட பணிகளை என்னால் மேற்கொள்ள முடியும்.

அதேபோன்று தற்போது மக்கள் மத்தியில் காணப்படும் அமைதியற்ற நிலை, சந்தேகம் மற்றும் அச்சம் என்பவற்றை மாற்றியமைப்பதற்காக ஊடக அறிக்கைகள் மற்றும் வாய்மூல விளக்கமளித்தல்கள் ஊடாக ஏற்கனவே மக்களை விழிப்பூட்டியிருக்கிறேன்.

இந்நிலையில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் மேற்கொண்டுள்ள பல்வேறு தீர்மானங்கள் குறித்து திருப்தியடைய முடியாதுள்ளது.

எனினும் பொதுமக்கள் சார்பில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் சரியான தீர்மானங்கள் தொடர்பில் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராக இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.