சனி பகவான் ஏன் கெடுதலை தருகிறார் தெரியுமா?

சனி பகவான் ஏன் கெடுதலை தருகிறார் என்பதற்கு புராணக் ஒரு கதை உண்டு. சனி பகவானுக்கு தவம் செய்வதில்தான் ஈடுபாடு. இல்லறத்தில் நாட்டமே இல்லை. இதை அறியாமல் அவருக்கு சித்திரதா என்பவர் தன் மகளை சனிபகவானுக்கு மணம் செய்து வைத்தார்.

கல்யாணமான பின்பும் கூட தன் மனைவியை நேசிக்காமல் தவத்திலே ஈடுபட்டார் சனீஸ்வரன். ஒரு பெண்ணை எதற்காகத் திருமணம் செய்து கொண்டோம் என்பதை மறந்த சனிபகவானை எண்ணி எண்ணி விரக வேதனையால், அவன் மனைவி சபித்துவிட்டாள்.

"ஒரு பெண்ணின் ஆசையைப் புரிந்து கொள்ளாத நீங்கள், கணவர் என்ற முறையில் வாழத் தெரியாத நீங்கள், தவ வலிமையின் ஆனந்தம் அடையாமல் போகட்டும் என்று சபித்த வார்த்தைகளால், சனிபகவான் நொந்து போனார். அன்று முதல் அவரது பார்வை வக்கிரமாக அமைந்துவிட்டது. மாற்றவே முடியவில்லை என்பது ஐதீகம்.

சனிக்கிழமை விரதம்... காகத்துக்கு உணவு!

உடலில் சிறுநீர்ப்பை, பற்கள், எலும்புகள், மண்ணீரல், காது முதலானவை சனியைக் குறிக்கும். சிறுநீரகக் கோளாறு, பாதத்தில் உண்டாகும் நோய், குஷ்டம், வலிப்பு முதலானவை சனியால் ஏற்படக்கூடியவை என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

ஒன்பது கிரகங்களில் சனியும் ஒன்று. ஆனால் எந்தக் கிரகத்துக்கும் இல்லாத வகையில், சனியை, சனீஸ்வரன் என்று அழைக்கிறோம். ஈஸ்வரப் பட்டம் பெற்ற ஒரே கிரகம்... சனி.

இத்தனைப் பெருமைகள் கொண்டிருந்தாலும் சனி அசுப கிரகம்தான். இன்னும் சொல்லப்போனால் ஒரு நீதிபதியைப் போல் செயல்படக்கூடியவர் சனி பகவான் என்கிறார்கள் ஜோதிடர்கள்.

எப்போதெல்லாம் சனி கிரகத்தால் கஷ்டங்களும் நேருகிறதோ, அப்போதெல்லாம் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

கோணஸ்தோ பிங்களோ பப்ரு; க்ருஷ்ணோ

ரெளத்ராம்தகோ யம;

ஸெளரீ சனைஸ்வரோ மந்த; பிப்பலாதேன ஸம்ஸ்துந;

என்கிற ஸ்லோகத்தைச் சொல்லி சனி பகவானை வேண்டிக்கொள்ளலாம்.

சனிக்கிழமையன்று சனி பகவானை வழிபடுவது மகத்துவம் நிறைந்தது. தினமும் காகத்துக்கு உணவிட்டாலும் சனிக்கிழமையன்று இந்த ஸ்லோகத்தைச் சொல்லி சனீஸ்வரரை வழிபட்டால், கிரக தோஷங்கள் விலகும்.

அதோடு எள் தீபமேற்றி வழிபட்டால் பாவங்கள் அனைத்தும் விலகும். சனி பகவானை மனதில் நினைத்து, காகத்துக்கு சனிக்கிழமையில் உணவிட்டால், கெடுபலன்களில் இருந்து விடுபடச் செய்வார் சனி பகவான்.

எனவே முடிந்த போதெல்லாம் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி, சனீஸ்வர பகவானை வேண்டுங்கள். பாபங்களில் இருந்து விலகி நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.